

ஏக்கருக்கு 2,400 கிலோ மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்றிருந்த நடைமுறை நீக்கப்பட்டு, விவசாயிகள் கொண்டுவரும் நெல்முழுவதும் கொள்முதல் செய்யப்படும் என மாநில உணவுத் துறைஅமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து அதிகபட்சமாக ஏக்கருக்கு 2,400 கிலோ மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற நடைமுறை இருந்ததால், விவசாயிகள் அவதிப்பட்டு வந்தது தொடர்பாக, ‘இந்துதமிழ்' நாளிதழில் நேற்று முன்தினம் (அக்.7) செய்தி வெளியாகிஇருந்தது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மடிகை, தென்னமநாடு உள்ளிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், அரசு மற்றும் தனியார் அரைவை ஆலைகளில் மாநில உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை தீவிரமாக நடைபெற்று வருவதால், கொள்முதல்பணிகளை விரைவுபடுத்த முதல்வர்உத்தரவிட்டுள்ளார். டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடம் இருந்துகொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகள் போர்க்கால அடிப்படையில் பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு மாநில அளவில் 43 லட்சம் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 45 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நிகழாண்டு அதைவிட அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்படும்.
கடந்த ஆண்டு கரும்பு சாகுபடி செய்த 1.5 லட்சம் விவசாயிகளுக்கு உரிய விலை, போதிய பணம் வழங்கப்படாததால், கரும்பு விவசாயிகள் பெருமளவில் நெல் சாகுபடிக்கு மாறிவிட்டனர். இதனால், நெல் சாகுபடியின் பரப்பளவு அதிகமாகி உள்ளது.
நெல் விற்பனை செய்ய மத்தியஅரசு கொண்டுவந்த இணையவழி நடைமுறைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, முதல்வர் உத்தரவின்பேரில், இணையவழி நடைமுறை தற்போது பின்பற்றப்படவில்லை.
மேலும், தற்போது நெல் மகசூல்அதிகமாக இருப்பதால் ஏக்கருக்கு 2,400 கிலோ மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்றிருந்த நடைமுறை நீக்கப்பட்டு, விவசாயிகள் எவ்வளவு நெல் கொண்டு வந்தாலும் கொள்முதல் செய்யப்படும். அதே நேரத்தில், விவசாயிகள் போர்வையில் வியாபாரிகள் நெல்லை விற்க அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
20% வரை ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் முறையிடப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து மூட்டைக்கு ரூ.40 வாங்கக் கூடாது என கொள்முதல் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கான ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.