

தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.26 கோடி மதிப்பிலான 530 கிலோ கஞ்சாவை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரைப் பகுதியில் கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா மற்றும் போலீஸார் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் ரோந்துப் பணி மேற்கொண்டனர்.
இந்நிலையில் தருவைகுளம் சந்தியாகப்பர் கோயில் பகுதியில் சிலர் படகில் சில மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். சந்தேகத்தின்பேரில் அவர்களை போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது அந்தப் படகில் 15 மூட்டைகளில் மொத்தம் 530 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.26 கோடி என, போலீஸார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா மூட்டைகள் மற்றும் படகு பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவநாயர் காலனியைச் சேர்ந்த அந்தோணி பிச்சை(41), திரேஸ்புரம் சில்வையார் கோயில் தெருவைச் சேர்ந்தலெனிஸ்டன்(48), எஸ்.எஸ்.மாணிக்கபுரத்தைச் சேர்ந்த ஜெயஸ்டன்(37), ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த செல்வராஜ்(25) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், கஞ்சா மூட்டைகளை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.