

திருவள்ளூரிலிருந்து, ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திர பகுதிகளுக்கு செல்லும் வகையில், ஊத்துக்கோட்டையில் ஆரணி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலத்தை வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பயன்படுத்தி வந்தனர்.
ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர் அணையிலிருந்து உபரிநீர் திறக்கும் போதெல்லாம் இந்த தரைப்பாலம் மூழ்கி விடுவதால், போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்ட வண்ணம் இருப்பதால், ஆரணி ஆற்றின் குறுக்கே ரூ.28 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பரில், ஆந்திர மாநிலத்தில் பெய்த கன மழையால், ஆரணி ஆற்றில் ஓடிய வெள்ளத்தால் ஊத்துக்கோட்டை தற்காலிக தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. பிறகு, சீரமைக்கப்பட்ட தரைப்பாலம் கடந்த ஜனவரியில் பெய்த மழையின்போது உடைந்தது. தொடர்ந்து, தரைப்பாலம் சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் ஆந்திர மாநில பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக நந்தனம் காட்டுப்பகுதி, சுருட்டப்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வெள்ள நீரால் சுருட்டப்பள்ளி தடுப்பணை நிரம்பி வழிகிறது. அந்த நீர் ஆரணி ஆற்றில் ஓடுகிறது.
இதனால் தற்காலிக பாலம் பலமிழந்து இருந்த நிலையில், திருவள்ளூரில் இருந்து ஆந்திரா நோக்கிச் சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று, தரைப்பாலத்தில் சிக்கியது. இதுகுறித்து, தகவலறிந்த நீர்வளத் துறையினர் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் அந்த லாரியை மீட்டனர். லாரி சிக்கிய இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் 4 சக்கர வாகனங்கள் அந்த பாலத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், சுருட்டப்பள்ளி அணையில் இருந்து, இன்னும் அதிகளவிலான நீர் வரும் பட்சத்தில் மேலும் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என, நீர்வளத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.