

மலேசியா சென்றிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், சனிக்கிழமை இரவு சென்னை திரும்பினார். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருந்து 14 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. கடந்த மாதம் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களை அழைத்து விஜயகாந்த் முக்கிய ஆலோசனை நடத்தினார். தேமுதிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களையும் மாவட்டச் செயலாளர்களையும் தனித் தனியாக சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தார்.
இதற்கிடையே, விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக் கும் ‘சகாப்தம்’ படத்தின் பாடல் காட்சிகளை வெளிநாட்டில் எடுக்க திட்டமிட்டிருந்தனர். இதற்காக விஜயகாந்த், மனைவி பிரேமலதா வுடன் கடந்த 10-ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்றார். 10 நாட்களுக்கு மேலாக அங்கு தங்கியிருந்த விஜயகாந்த், சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் சென்னை திரும்பினார்.
இதுதொடர்பாக தேமுதிக தரப்பில் கேட்டபோது, ‘‘மலேசியா சென்றிருந்த விஜயகாந்த், சென்னை திரும்பிவிட்டார். அவருக்கு கண்ணில் சிகிச்சை எதுவும் செய்யவில்லை. ஏற்கெனவே, மாவட்டச் செயலாளர் களிடம் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். தேர்தல் தோல்விக்கான காரணங்களையும் ஆராய்ந்துள்ளனர். அடுத்த 3 நாட்களில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கி றோம்’’ என்றனர்.