

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே பிரபல ரவுடி கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். 3 தனிப்படைகள் அமைத்து, தலைமறைவானவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், லாலாபேட்டையை அடுத்த கருப்பத்தூரைச் சேர்ந்தவர் கோபால் என்கிற கோபாலகிருஷ்ணன் (51). பிரபல ரவுடியான இவர் மீது கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கருப்பத்தூரில் உள்ள அவரது தோட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை வெட்டுக் காயங்களுடன் கோபால் சடலமாகக் கிடந்தார்.
இதுகுறித்துத் தகவலறிந்த லாலாபேட்டை போலீஸார், சம்பவ இடத்திற்குச் சென்று கோபாலின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதே ஊரைச் சேர்ந்த ராஜா என்கிற ராஜபாண்டியன் (33), வயலூரைச் சேர்ந்த சரவணகுமார் (25), ஆகியோருக்கும் கோபாலுக்கும் இடையே சமூகத் தலைவரின் பதாகை வைப்பது மற்றும் கட்சிப் பிரச்சினை இருந்துள்ளது. அதனால் கோபாலகிருஷ்ணனை இருவரும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
கோபாலகிருஷ்ணனைக் கண்காணித்துத் தகவல் அளிக்க கம்மநல்லூரைச் சேர்ந்த சுரேஷ் (36), தெற்கு தெரு வினோத்குமார் (36) இருவரை நியமித்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி ராஜபாண்டியன், சரவணகுமார் ஆகிய இருவரும் நாமக்கல் மாவட்டம் வரகூரைச் சேர்ந்த மனோஜ் (25), திருச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்த கார்த்தி (36) ஆகியோருடன் சேர்ந்து கோபாலகிருஷ்ணனைக் கடந்த 6-ம் தேதி வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. திருகாம்புலியூரைச் சேர்ந்த நந்தகுமார் (33) கொலை சதிக்கு வெளியூர் ஆட்கள் தங்க அடைக்கலம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து ராஜா என்கிற ராஜபாண்டியன், சரவணகுமார், சுரேஷ், கார்த்தி, நந்தகுமார், மனோஜ், வினோத்குமார் ஆகிய 7 பேரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும் இக்கொலையில் தொடர்புடைய, தலைமறைவாக உள்ளவர்களை விரைவில் கைது செய்ய குளித்தலை டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.