

புதுச்சேரி, காரைக்கால் நகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை சுழற்சி முறையில் மாற்றியமைத்து, கடமைக்காக அல்லாமல் குளறுபடிகளை களைந்து முனைப்புடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என காரைக்கால் திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச்.நாஜிம் கூறியுள்ளார்.
காரைக்காலில் இன்று(அக்.8) அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ”புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் அரசியல் கட்சிகள், பொதுமக்களிடையே இடஒதுக்கீடு தொடர்பாக குழப்பம் நிலவுகிறது. நீதிமன்றம் தலையிட்டதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு தொடர்பாக 2019-ம் ஆண்டு போடப்பட்ட உத்தரவை ரத்து செய்து புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
அதன்படி ஏனாமில் 15.50 சதவீதம் ஆதிதிராவிடர்கள் அதிகம் உள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் 11.25 சதவீதத்தினர் உள்ளனர். தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பையொட்டி ஏனாம் நகராட்சி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். ஆனால் புதுச்சேரி, காரைக்கால் நகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு உள்ள நிலையே இப்போதும் இவற்றில் தொடர்வது கண்டனத்துக்குரியது. இந்தமுறை இவற்றை சுழற்சி முறையில் மாற்றியமைத்திருக்க வேண்டும். இந்த குழப்பம் தீர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு வார்டிலும் ஆதி திராவிட மக்கள் எங்கு அதிகம் உள்ளனர் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என 2012- ம் ஆண்டு உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. ஆனால் மாநில தேர்தல் ஆணையத்தின் தற்போதையை இடஒதுக்கீடு அறிவிப்பு இந்தத் தீர்ப்புக்கு எதிராக உள்ளது. அதனால் இதனை சுட்டிக் காட்டியும் கூட ஒருவர் உச்ச நீதிமன்றத்துக்கு சென்று தேர்தலுக்கு தடைபெறும் வாய்ப்புள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான உரிய அதிகாரம், நிதி ஆதாரம் உள்ளிட்டவற்றை பெறுவதற்கு புதுச்சேரி முதல்வர் மத்திய அரசை அணுகி முயற்சிக்க வேண்டும். இல்லையெனில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தினாலும் பலனில்லாமல் போகும்.
தர்போதுதான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே அவர்களை தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்” இவ்வாறு நாஜிம் கூறினார்.