

புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ், திமுக கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகள் கலந்து ஆலோசனைக்கூட்டம் தனியார் ஹோட்டலில் நாளை நடக்கிறது. அதே நேரத்தில் இவ்விவகாரத்தில் ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக தரப்பில் மவுனம் காக்கின்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி புதுவையில் உள்ளாட்சி தேர்தலுக்கு புதிய இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் பிற்படுத்தபட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. இது அரசியல்கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சிகள் கூட்டம் நாளை தனியார் ஹோட்டலில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, இந்தியகம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உட்பட அரசியல் கட்சிகளுக்கும், பல்வேறு சமூக அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி கட்சிகள் தரப்பில் விசாரித்தபோது, "கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட உள்ளது. அதோடு பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் இடஒதுக்கீடை ரத்து செய்ததை எதிர்த்து மாநிலம் தழுவிய தொடர் போராட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட உள்ளது" என்று குறிப்பிட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக முதல்வர் ரங்கசாமியை கேட்டதற்கு, அவர் பதில் தரவில்லை.