

காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த நமச்சிவாயத்துக்கு அமைச்சர் மற்றும் பேரவையில் பாஜகத்தலைவர் ஆகிய பொறுப்புகளைத் தொடர்ந்து தற்போது தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி தரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவருடன் கட்சியில் இணைந்தோருக்கு பதவிகள் தரப்படாத சூழல் நிலவுகிறது.
புதுச்சேரியில் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை அப்போதை தலைவராக இருந்த நமச்சிவாயம் தலைமையில் காங்கிரஸ் சந்தித்து வென்றது. ஆனால் தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வரானார். இதனால் நமச்சிவாயம் கடும் அதிருப்தி அடைந்தார். தொடர்ந்து ஆளுநர் கிரண்பேடிக்கும், அப்போதைய முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் வெடித்ததால் திட்டங்கள் நடைமுறைக்கு வரவில்லை. மக்கள் கடும் பாதிப்பு அடைந்தனர். அதே நேரத்தில் காங்கிரஸ் அரசு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கவிழ்ந்தது.
அமைச்சர் நமச்சிவாயம், எம்எல்ஏக்கள் ஜான்குமார், தீப்பாய்ந்தான், வெங்கடேசன் ஆகியோர் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தனர்.
அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரசிலிருந்து விலகியது புதுவை காங்கிரசில் பிளவை ஏற்படுத்தியது. காங்கிரசின் மாநில, மாவட்ட, வட்டார, அணி நிர்வாகிகளில் பிளவு ஏற்பட்டு நமச்சிவாயத்தோடு பலரும் பாஜகவில் இணைந்தனர். இதையடுத்து 2021ல் நடந்த புதுவை சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட பெறவில்லை. முதல்வராக இருந்த நாராயணசாமி தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்தார்.
இத்தேர்தலில் பாஜக 9 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களை கைப்பற்றி, என்ஆர்.காங்கிரசோடு கூட்டணி ஆட்சியை அமைத்தது. பாஜக அரசு உருவாக முக்கிய காரணமாக திகழ்ந்த அமைச்சர் நமச்சிவாயத்துக்கு உள்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.
அத்துடன் பேரவையில் பாஜக தலைவராகவும் உள்ளார். கட்சியில் முன்னிலைப்படுத்தப்படும் இவருக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவியை கட்சித்தலைமை வழங்கியுள்ளது. இது நமச்சிவாயத்தின் ஆதரவாளர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில் காங்கிரசில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்கள் பாஜகவுக்கு மாறினர். அவர்களுக்கு இதுவரை பாஜகவில் இதுவரை எந்த பொறுப்பும் வழங்கப்படாமல் உள்ளது. நமச்சிவாயத்தைத்தொடர்ந்து தங்களுக்கும் பதவிகளை பாஜக தரும் என்ற எதிர்பார்ப்பிலுள்ளனர். அதேநேரத்தில் பாஜகவில் நீண்ட காலம் உள்ளோர், புதிதாக கட்சியில் இணைந்தோருக்கு முன்னுரிமை தரப்படுவதால் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் பேசத்தொடங்கியுள்ளனர். உள்ளாட்சித்தேர்தல் சூழலில் இதை கட்சித்தலைமை எப்படி சமாளிக்கபோகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.