

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்ட 14 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களில் பக்தர்களின் தரிசனத்துக்குத் தமிழக அரசு தடைவிதித்துள்ளது.
இந்நிலையில், வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்கவும், பக்தர்களை அனுமதிக்கவும் வலியுறுத்தி, பாஜக சார்பில் கோவை தண்டுமாரியம்மன் கோயில் முன்பு நேற்று (அக். 07) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
காவல்துறையின் தடையை மீறி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், மாநில பொதுச் செயலாளர் ஜி.கே.எஸ்.செல்வக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக, ரேஸ்கோர்ஸ் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரஜினிகாந்த் ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், "கரோனா காலத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறப்பட்டது.
இது தொடர்பான புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், கரோனா தொற்றுப் பரவும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்ட 14 பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.