நான்கு ஆண்டுகளாகப் புதிய ஆழ்துளை கிணறு அமைக்காததைக் கண்டித்து மக்கள் போராட்டம்

காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
Updated on
1 min read

புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீர் விநியோகிக்காததைக் கண்டித்து, தேத்தான்பட்டி கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே, தேத்தான்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராம மக்களில் அதிகமானோருக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்படுவதாகவும், பற்கள் கறை பிடிப்பதாகவும் எழுந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த 2017-ல் சுகாதாரத் துறை அலுவலர்கள் குடிநீரை ஆய்வு செய்தனர்.

அத்துறையினரின் ஆலோசனையுடன், அந்த ஆழ்துளைக் கிணற்றில் இருந்து குடிநீர் விநியோகத்தை நிறுத்தியதோடு, வேறொரு இடத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

ஆனால், எவ்விதப் பணியையும் மேற்கொள்ளாததால், குடிநீரின்றி மக்கள் அவதிப்பட்டனர். இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, ஆழ்துளைக் கிணறு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ததோடு, இடமும் தேர்வு செய்யப்பட்டது.

ஆனால், பணியைத் தொடங்காமல் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வருகிறதாம். இதைக் கண்டித்தும், விரைவாக ஆழ்துளைக் கிணற்றை அமைத்து குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.சொர்ணக்குமார் தலைமையில், பொதுமக்கள் இன்று (அக். 08) காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கட்சியின் மாவட்டச் செயலாளர் மு.மாதவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், துணை வட்டாட்சியர் பழனியப்பன் மற்றும் போலீஸாரின் சமாதான முயற்சியை ஏற்க மறுத்த பொதுமக்கள், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியைத் தொடங்கினால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம், இல்லையேல் போராட்டத்தைத் தொடர்வோம் எனத் தெரிவித்தனர். இதையடுத்து அலுவலர்கள் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in