

கரூரில் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணியும், கடவுள்கள், எமன் வேடமணிந்து, வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் (அக். 10) 5-வது கரோனா தடுப்பூசி செலுத்தும் மாபெரும் முகாம் நடைபெறுகிறது. இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கரூர் நகராட்சி அலுவலகம் முன் இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி இன்று (அக். 08) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் இருசக்கர வாகனப் பேரணியைத் தொடங்கிவைத்து, பேரணியில் பங்கேற்று இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றார். மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், சமூகநல பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் சைபுதீன் ஆகியோரும் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று பேரணியில் பங்கேற்றனர். கரூர் நகராட்சி அலுவலகத்தில் பேரணி தொடங்கி தலைமை அஞ்சலகம், கரூர் நகர காவல் நிலையம், ஜூப்ளி கிளப், ஆசாத் பூங்கா வழியாக மீண்டும் நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது.
கரூர் காந்தி கிராமம் இரட்டை தண்ணீர் தொட்டிப் பகுதியில் சிவன், பார்வதி, விஷ்ணு, விநாயகர், முருகன் ஆகிய கடவுள்கள் மற்றும் எமன் வேடமணிந்த நாடகக் கலைஞர்கள், கடைகள், வாகன ஓட்டிகள், வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தொடங்கிவைத்தார்.
கடவுள் மற்றும் எமன் வேடமணிந்த நாடகக் கலைஞர்கள் பூக்கடை, இருசக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா? என விசாரித்து, கரோனாவை தடுக்கக் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், கரூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, நகர்நல அலுவலர் லட்சியவர்ணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.