

புதுச்சேரி, காரைக்கால் நகராட்சித் தலைவர் பதவிகளைப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து மாநிலத் தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் அறிவித்துள்ளார்.
நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிக்கையை மாநிலத் தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை நேற்று ரத்தானது.
இதுபற்றி புதுச்சேரி மாநிலத் தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் படி புதுச்சேரி உள்ளாட்சித் துறையானது கடந்த 7.3.2019-ல் வெளியிட்ட அரசாணைகளைத் திரும்பப் பெற்றுள்ளது. இதனால் புதுச்சேரி மாநிலத் தேர்தல் ஆணையம் கடந்த 23.8.2021-ல் வெளியிட்ட நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிக்கையைத் திரும்பப் பெற்றுள்ளது. இதையடுத்து புதிய இட ஒதுக்கீடு விவரம் வெளியாகிறது.
அதன்படி புதுச்சேரி நகராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் மற்றும் பதவிகளை அளித்தல் மற்றும் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்தல் ஆகியவை 1996-ன் 3-வது விதியின் படியும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 5 நகராட்சிகளுக்கான பதவிகளுக்கு அட்டவணை இனத்தவர், அட்டவணை இன (பெண்கள்), பொதுப் பெண்கள் மற்றும் பொதுப் பிரிவுகளுக்கான இட ஒதுக்கீடு பற்றிய புதிய அறிவிக்கையை புதுச்சேரி மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி புதுச்சேரி மற்றும் காரைக்கால் நகராட்சிகள்- பெண்களுக்கும் (பொது), உழவர்கரை மற்றும் மாஹே நகராட்சிகள்- பொது ஒதுக்கீட்டிலும், ஏனாம் நகராட்சி- அட்டவணை இனத்தவருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி, உழவர்கரை, காரைக்கால், மாஹே, ஏனாம் நகராட்சிகளிலுள்ள கவுன்சிலர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியல்களும் வெளியிடப்பட்டுள்ளன".
இவ்வாறு தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் தெரிவித்துள்ளார்.