

நவராத்திரியை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டுஉள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் இக்கொலுவைப் பார்த்து, மகிழ்ந்து செல்கின்றனர்.
சைவத் திருத்தலங்களில் முதன்மைப் பெற்ற திருத்தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர்கோயிலில், நவராத்திரியை ஒட்டிபிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது. கோயில் கொலு மண்டபத்தில் சுமார் 30 அடி நீளம், 30 அடி அகலம், 30 அடி உயரத்தில் 21 பெரிய படிகளைக் கொண்டு இக்கொலு அமைக்கப்பட்டுள்ளது. இதில், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.
இதிகாச, புராண கருத்துகளை எடுத்துரைக்கும் பொம்மைகள் கலைநயம் பொங்கும் வகையில் இக்கொலுவில் இடம்பெற்றுள்ளன. நவராத்திரியின் ஒன்பது தினங்களிலும் இரவில் அம்பிகைக்கு அரிய வகை அணிமணிகள் கொண்டு அலங்கரித்து, கோயிலைவலம் வரச்செய்து, கொலு மண்டபத்தில் கொண்டு வந்து ஊஞ்சலில் அமர்த்தி சிறப்பு வழிபாடுகளோடு தீபாராதனை நடைபெறுகிறது.
‘இதை தரிசிக்க வரும் அனைவருக்கும் அம்பிகை மங்கலமான வாழ்வும், நீடித்த மகிழ்வும் அருள்கிறாள்’ என்பது ஐதீகமாகும். நேற்று(அக்.7) தொடங்கிய இக்கொலு வரும் 14-ம் தேதி வரை நடக்கிறது. மாலை 6 மணிமுதல் இரவு 8 மணி வரை கொலுமண்டபம் திறந்து பக்தர்கள், பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.
இதுகுறித்து கோயில் டிரஸ்டிமற்றும் பூஜகர் நடராஜ தீட்சிதர் கூறும்போது, “அனைத்து தெய்வங்களையும் ஒருங்கே வழிபாடு செய்யும் அருமையான ஏற்பாடாக நம் முன்னோர் நவராத்திரி கொலுவை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
சிதம்பரம் நடராஜர் கோயில் சிவ வழிபாடு கொண்ட கோயிலாக இருந்தாலும் கூட காணாதிபத்யம், வைணவம், சாக்தம், கௌமாரம், சௌரம் உள்ளிட்ட பக்தி மார்க்கம்கொண்ட அழகு பொம்மைகளும் இக்கொலுவில் இடம்பெற்றிருக்கின்றன. முக்கியமாக, மண்வகையால் செய்யப்பட்ட பொம்மைகள் இங்கு வரிசைபடுத்தப்பட்டிருப்பது நவராத்திரியின் சிறப்பம்சமாகும். ஒவ்வொரு வருடமும் ஒருபுதுமை அமையும். இந்த வருடம், கயிலையையும், கங்கையையும் நினைவுகூரும் அமைப்பு இடம் பெற்றிருக்கிறது” என்றார்.
கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்த கோயம்புத்தூரைச் சேர்ந்த தமிழரசி கூறும்போது, “கொலு சிறப்பாக இருக்கிறது. உலகுக்கே படி அளக்கும் அம்மையப்பன் நடுநாயகமாக வீற்றிருக்கும் இந்தக் கோயிலில் மிகப்பெரிய கொலுவைக் கண்டு பரவசம் அடைந்தேன்” என்றார்.
இதேபோல் தரிசனத்துக்கு வந்திருந்த கடலூர் மேற்கு மாவட்டபாஜக மகளிரணி தலைவி சுகந்தாசெல்வக்குமார் கூறுகையில், “ஒவ்வொரு வருடமும் நவராத்திரியின்போது இங்கு பெரிய அளவில் கொலு வைக்கப்படும். பக்தர்கள் குடும்பத்துடன் கோயிலுக்கு வந்துசாமி தரிசனம் செய்துவிட்டு கொலுவைப் பார்த்து மகிழ்வுடன் செல்வர். வழக்கம்போல் இந்தஆண்டும் இந்தப் பிரம்மாண்டகொலு சிறப்பாக அமைந்திருக்கிறது” என்றார்.