

நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை போலீஸார் விரிவுபடுத்தி வருகின்றனர். இந்த வழக்கின் 103 சாட்சிகளில் 41 சாட்சிகளிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது பல சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உதகையில் உள்ள பழைய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 1-ம் தேதி உதகை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சீலிடப்பட்ட நிலை அறிக்கையை நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி வேல்முருகன் தாக்கல் செய்தார். பின்னர் வரும் 29-ம் தேதிக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கோடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்த தினேஷ் தற்கொலை செய்துகொண்ட வழக்கை விசாரித்த சோலூர்மட்டம் உதவி ஆய்வாளராக இருந்த ராஜனிடம், நேற்று தனிப்படை போலீஸார் சுமார் 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.