

தமிழகத்துக்கு நேற்று ஒரே நாளில் 17 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 5.01 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது தமிழகத்தில் 64% பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 22 சதவீதம் பேர் இரு தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். வேகமாக தடுப்பூசி செலுத்த ஏதுவாக மத்திய அரசும் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் 100% பழங்குடியின மக்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். ஒரே நாளில் 17 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளன.
வரும் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அனைவரும், குறிப்பாக 60 வயதை கடந்த நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் 70 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பாற்றல் கூடியுள்ளது.
தமிழகத்தில் 330 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றால் மட்டுமே தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை அனுமதிக்க வேண்டும் இல்லையெனில் முதலிலேயே அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.