

சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 7 வாரங்களில் 2.83 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ரூ.6.92 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கவும், பயன்படுத்தவும், விற்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலில் உள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் மீதான தடை தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தியாகராய நகர், பாண்டிபஜாரில் மாநகராட்சி அலுவலர்கள் நேற்று கள ஆய்வு நடத்தினர். அப்போது, 175 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 19 முதல் அக்டோபர் 6-ம் தேதி வரையிலான 7 வாரங்களில் 7,328 வணிக நிறுவனங்கள், அங்காடிகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 2.83 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.6 லட்சத்து 92 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வணிக நிறுவனங்கள், சிறு அங்காடிகள், மக்கள் அனைவரும் தவிர்க்க வேண்டும் என்று மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.