ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், காட்டாங்கொளத்தூரில் விதிகளை மீறி வாக்காளர் பட்டியலில் 5 ஆயிரம் வடமாநிலத்தினர் சேர்ப்பு: மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், காட்டாங்கொளத்தூரில் விதிகளை மீறி வாக்காளர் பட்டியலில் 5 ஆயிரம் வடமாநிலத்தினர் சேர்ப்பு: மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்
Updated on
1 min read

ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், காட்டாங்கொளத்தூர் ஆகிய ஒன்றியங்களில் விதிகளை மீறி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தினர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, மாநில தேர்தல் ஆணையத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

அக்.9-ம் தேதி 2-ம் கட்டமாக நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஆகிய ஒன்றியங்களில் வாக்காளர் துணை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும் தற்காலிகமாக கட்டிட பணியாற்ற வந்திருக்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவருகிறது. இந்த வாக்காளர்கள் அனைவரும் போலியானவர்கள் என்பது தெரிந்துவிடும் என்பதால் துணை வாக்காளர் பட்டியலில் புகைப்படம் இணைக்காமல் வெளியிடப்பட்டுள்ளது.

முதல்கட்ட தேர்தல் அக்.6-ம் தேதி முடிவடைந்த நிலையில், வெளியிடப்பட்டுள்ள துணை வாக்காளர் பட்டியல், 2-ம் கட்ட தேர்தலுக்கு ஏற்புடையதல்ல. எனவே, இத்தகைய போலி வாக்காளர்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லை. அவர்களை வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது. எனவே, பஞ்சாயத்து தேர்தல் விதிகளுக்கு எதிராக, எந்தவித ஆதாரமும் இல்லாமல், புகைப்படமும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ள துணைப் பட்டியலில் உள்ளடக்கிய போலி வாக்காளர்கள் அனைவரையும் 9-ம் தேதி நடக்கும் 2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ஆர்.எம்.பாபு முருகவேல், மாநில தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவில், ‘முதல் மற்றும் 2-ம் கட்ட தேர்தலில் வாக்குகள் பதிவாகும் பெட்டிகளை பாதுகாப்பான அறையில் வைத்து, 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, சிசிடிவி கேமரா உதவியுடன் கண்காணிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்தி, வெற்றி நிலவரத்தை உடனுக்குடன் பத்திரிகை செய்திக்குறிப்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட அறிவுறுத்த வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in