

பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு தந்தை மற்றும் 2 மகன்களை மட்டுமே பங்கேற்க வைத்து பொது ஏலம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக வீட்டு வசதி வாரியத் தலைவர் முருகையாபாண்டியன் மீது சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த என்.ஷீலா உயர்நீதிமன் றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘‘எனது மாமனார் ராகவேலுக்கு சொந்தமான வீடு மற்றும் இடம் அண்ணாநகர் திருமங்கலம் காலனி அண்ணா தெருவில் உள்ளது. எனது மாமனார் எழுதிவைத்த உயில்படி, அந்த சொத்து எனது கணவர் நீலமேகத்துக்கு பாத்தியப்பட்டது. அதன்பிறகு எனது பெயருக்கு அந்த சொத்தை எனது கணவர் மாற்றினார்.
இந்நிலையில் கடந்த 2013-ல் திடீரென எங்களது வீட்டுக்கு வந்த வீட்டுவசதி வாரிய அதிகாரிகள், அந்த இடம் வாரியத்துக்கு சொந்தமானது எனக்கூறி காலி செய்யுமாறு மிரட்டினர். நான் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே எனது வீட்டை அடியாட்களுடன் வந்து இடித்து, எம்.எஸ்.ஜெயின் என்ற தொழிலதிபருக்கு முறை கேடாக அந்த இடத்தை விற் பனை செய்துள்ளனர்.
இதற்காக வீட்டுவசதி வாரிய தலைவராக உள்ள எம்எல்ஏ முருகையா பாண்டியன் மற்றும் அதிகாரிகள் ஜெயினுடன் கூட்டு சேர்ந்து பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளனர். எனது வீடு மட்டுமின்றி அருகில் உள்ள மற்ற 3 இடங்களையும் அந்த ஜெயின் முறைகேடாக வாங்கியுள்ளார். பொதுஏலம் எனக்கூறிவிட்டு, அந்த ஏலத்தில் எம்.எஸ்.ஜெயின் மற்றும் அவரது 2 மகன்களை மட்டுமே பங்கேற்க வைத்து வாரியத் தலைவர் முருகையாபாண்டியன் மற்றும் வீ்ட்டுவசதி வாரிய செயற்பொறியாளர், வணிக மேலாளர் ஆகியோர் அரசுக் கும் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
முருகையா பாண்டியன் தனது பெயரிலும், அவருடைய மகன் ஆர்.எம்.வெங்கட்ராமன் பெயரிலும் கள்ளிடைக்குறிச்சி, பாப்பன்குளம், ஜமீன் சிங்கம்பட்டி என பல ஊர்களில் ரூ.பல லட்சம் மதிப்பில் நிலம் வாங்கி குவித்துள்ளார். சொகுசு கார், சரக்கு வாகனம் வாங்கியதற்கோ அல்லது சொத்துகள் வாங்கியதற்கோ அவர் இதுநாள் வரை முறையாக வருமானவரி மற்றும் சொத்துவரி கட்டாமல் ஏமாற்றி வருகிறார். எனவே அவர் மீதும், ஊழல் புரிந்த வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் மீதும் ஊழல்தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.குமரேசன், எதிர்மனுதார்கள் மீது வழக்குப்பதிய போதிய முகாந்திரம் இருப்பதாகக் கூறி வாதிட்டார். அதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ், இந்த வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.