

முதுகுளத்தூரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையைச் சேர்ந்த வி.முகமது ஷாகுல் ஹமீது, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''ராமநாதபுரம் மாவட்டம் மேல முதுகுளத்தூரில் எங்களுக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் உள்ள கருவேல மரங்களை முருகன் என்பவர் அகற்றினார். பின்னர் அவர் எங்கள் நிலம் மற்றும் பாதையை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக மதுபானக் கடை நடத்தி வருகிறார். அரசு மதுபானக் கடை மூடப்பட்ட பிறகு சட்டவிரோதமாக மதுபானங்களை இரவு, பகல் பாராமல் எங்கள் நிலத்தில் வைத்து முருகன் விற்பனை செய்து வருகிறார். இதுகுறித்துக் கேட்டபோது அவர் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து முதுகுளத்தூர் போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது என் இடத்தில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளேன். அரசுப் பள்ளி, போக்குவரத்துப் பணிமனை அருகே சட்டவிரோத மதுபான விற்பனை நடைபெறுகிறது. எனவே, கமுதி- முதுகுளத்தூர் நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி இளங்கோவன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் கே.நீலமேகம், முகமது ரஸ்வி வாதிட்டனர். பின்னர் மனு தொடர்பாக ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி, சட்டவிரோதமாக மதுபானம் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.