

கிராம மக்களிடையே தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் எண்ணத்தை ஊக்குவிக்கும் வகையில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் குழந்தைகளுக்குக் குலுக்கல் முறையில் இலவச உயர்கல்வி வழங்கப்படும் என்று க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அறிவித்துள்ளது.
கரூர் மாவட்டம், க.பரமத்தியில் அரசு ஆரம்பப் பள்ளி உள்ளது. சர்வதேச தரச்சான்று பெற்ற பள்ளி என்ற அங்கீகாரத்துடன் கம்பீரமாக இயங்கி வரும் இந்தத் தொடக்கப் பள்ளியில், ஸ்போக்கன் இங்கிலீஷ், இந்தி, கராத்தே, யோகா, ஓவியம், இசை, நடனம், பாட்டு ஆகிய பயிற்சிகள் இலவசமாகக் கற்பிக்கப்படுகின்றன.
ஊர் மக்களின் ஆதரவோடு சுமார் ரூ.40 லட்சம் திரட்டப்பட்டு, பள்ளிக்குத் தேவையான சுற்றுச்சுவர், அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள், தண்ணீர்க் குழாய்கள், கழிப்பறை, நூலகம் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் மாணவர்களின் செயல்பாடுகளால் பள்ளிக்கு, சர்வதேச தரச் சான்று ISO 9001:2015 கிடைத்துள்ளது.
கிராமப்புறத்தைச் சேர்ந்த இந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 210 மாணவர்கள் படித்து வருகின்றனர். அங்குள்ள மக்களிடையே தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் எண்ணத்தை ஊக்குவிக்கும் வகையில், தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் குலுக்கல் முறையில் அவர்களின் குழந்தைக்கு இலவச உயர்கல்வி வழங்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்துப் பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறும்போது, ''கரோனா தொற்றுக்கு எதிராக முதல் தவணை தடுப்பூசியை இதுவரை செலுத்திக்கொள்ளாத கிராமப்புறப் பெற்றோர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்தத் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம்.
அதேபோல மாணவர்கள் நவம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிக்கு வரவுள்ள நிலையில், தொற்றுப் பரவலுக்கு இடமளித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். கரோனா தொற்றால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பில்லை என்று கூறப்பட்டாலும் அவர்களால் பெற்றோர்களுக்கும் சமுதாயத்துக்கும் தொற்று பரவிவிடக் கூடாது. இதனாலும் பெற்றோர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்கப்படுத்த நினைத்தோம்.
அதற்காகத் தடுப்பூசி போட்டுக்கொண்டு, சான்றிதழைக் காண்பிக்கும் பெற்றோர்களைக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, அதில் 3 பேரின் குழந்தைக்கு இலவசமாக உயர்கல்வி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளோம். பள்ளியிலும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று கரோனா தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறோம். இந்தக் குலுக்கல் அக்டோபர் 20-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
தேர்வாகும் பெற்றோரின் மாணவர்கள் அரசுக் கல்லூரிகளில் எந்தப் பட்டப் படிப்பு படித்தாலும் அவர்கள் படித்து முடிக்கும்வரை ஆகும் கல்விக் கட்டணத்துக்கான தொகையைப் பள்ளி செலுத்தும். அந்த மாணவர்கள் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், கலை, அறிவியல் என எந்தப் படிப்பு படித்தாலும் இது பொருந்தும். குலுக்கல் முடிந்ததும் அதற்கான உத்தரவாதக் கடிதம் பெற்றோர்களிடம் உடனடியாக வழங்கப்படும்'' என்று தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன் தெரிவித்தார்.
அரசே 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான கட்டணத்தைச் செலுத்திவிடுகிறதே என்று கேட்டபோது, ''அத்தகைய சூழலில் கட்டணத்துக்கு ஈடான தொகையை ரொக்கமாக மாணவர்களுக்கு வழங்கிவிட முடிவு செய்துள்ளோம். அந்தத் தொகையை அவர்கள் வேறு தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்று தெரிவித்தார்.
தனியாரின் பங்களிப்புடன் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்த ஆசிரியர் செல்வக்கண்ணன், அந்தத் தொகை போதவில்லை என்றால் தங்கள் பள்ளியில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் அறக்கட்டளை மூலம் உதவத் தீர்மானித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர், ''எங்களின் க.பரமத்தி அரசு ஆரம்பப் பள்ளியில் காமராஜர் கல்வி அறக்கட்டளை 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் தகுதிவாய்ந்த 115 மாணவர்களின் உயர்கல்விக்கு உதவி வருகிறோம். அறக்கட்டளையில் ரூ.1 கோடி வைப்பு நிதி உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையை வைத்து கல்வி உதவிகளை மேற்கொள்கிறோம்'' என்று அன்பாசிரியர் செல்வக்கண்ணன் தெரிவித்தார்.