Published : 07 Oct 2021 11:55 AM
Last Updated : 07 Oct 2021 11:55 AM

விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் கிடைத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: ஈபிஎஸ் வலியுறுத்தல்

ஈபிஎஸ்: கோப்புப்படம்

சென்னை

விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் கிடைத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஈபிஎஸ் இன்று (அக். 07) வெளியிட்ட அறிக்கை:

"மாடு கட்டி போரடித்தால்

மாளாது செந்நெல் என்று

யானை கட்டி போரடிக்கும் காலம்

ஒன்று தமிழகத்தில் இருந்தது.

பண்டைய காலங்களில் வேளாண்மையில் தமிழகம் எவ்வாறு சிறந்து விளங்கியது என்பதைக் குறிப்பிடுவதற்கும் நம் தமிழ்ப் புலவர்கள் கூறிய முதுமொழி இது.

ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றபோது, 2011-ம் ஆண்டில், தமிழகம் முழுவதும் 15 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு இருந்தது. தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுவதே எனது முதல் வேலை என்று தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்கிய பெருமை ஜெயலலிதாவையே சாரும்.

தொடர்ந்து தமிழகத்தை நீர் மிகை மாநிலமாக்கி, வேளாண்மையில் தமிழகம் முதலிடம் பெறுவதற்கு ஜெயலலிதா அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி, குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர்நிலைகளைச் தூர்வாரிச் சீரமைத்தது. டெல்டா மாவட்டங்களில் கடைமடைப் பகுதி கால்வாய்கள் தூர்வாரப்பட்டதால், குறித்த காலத்துக்குள் காவிரி நீர் அனைத்துப் பகுதிகளையும் சென்றடைந்தது. மேலும், டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததன் மூலமும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் குறித்த காலத்தில் பயிர்க் கடன் வழங்கியும், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் விவசாயிகளின் விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கியும் ஜெயலலிதா அரசு வேளாண் துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது.

முக்கியமாக, விவசாயிகள் காலத்தே பயிர் செய்ய வசதியாக, தேவையான விதை, உரம், யூரியா போன்ற இடுபொருட்களைக் குறித்த காலத்தில் தேவையான அளவு வழங்கியது.

மேலும், அறுவடை முடிந்த பிறகு தமிழகம் முழுவதும் தேவைப்படும் இடங்களில் எல்லாம், தமிழகம் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, தமிழக விவசாயிகள் பயிரிட்ட அனைத்து நெல்மணிகளும் விரைவாகக் கொள்முதல் செய்யப்பட்டு, அதற்குரிய பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டது.

ஆனால், கடந்த 5 மாத கால திமுக ஆட்சியில், வேளாண் இடுபொருட்கள் முதற்கொண்டு உரங்கள் வரை விவசாயப் பணிகளுக்குத் தேவையான பொருட்கள் கிடைக்கப் பெறாமல் தமிழக விவசாயிகள் தவிக்கின்றனர். அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

முக்கியமாக, விவசாயிகளுக்குத் தேவைப்படும் உரம் கிடைப்பதில்லை என்று கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களிலும், செய்தித்தாள்களிலும், செய்திகள் வெளிவந்துள்ளன.

குறிப்பாக, டெல்டா பகுதிகள் தவிர்த்து, கிணற்றுப் பாசனப் பகுதிகளிலும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள், தென் தமிழகத்தின் உட்பகுதிகள் என்று மாநிலம் முழுவதும் சுமார் 60 சதவீதம் விவசாயிகள் பயிர் செய்துவிட்டு, தற்போது பயிர்கள் வளர்ந்து வரும் சூழ்நிலையில், பயிர்கள் நன்றாக வளர்வதற்கும், விவசாயிகளுக்கு இந்தப் பருவத்துக்குத் தேவையான குறிப்பிட்ட உரங்கள் எந்தக் கூட்டுறவு சங்கங்களிலும், விற்பனைக் கடைகளிலும் தேவையான அளவு இல்லை என்றும், தேவைப்படும் உரத்தின் விலை, கடைக்காரர்களாலும், விற்பனையாளர்களாலும் செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன.

'ஆடிப்பட்டம் தேடி விதை' என்பது முதுமொழி.

அப்படி ஆடி மாதம் விதைத்த நெல்மணிகள் முளைத்துப் பயிராக வளரக்கூடிய சூழ்நிலையில், அதாவது செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பயிரின் வளர்ச்சிக்கு உரங்கள் பெருமளவில் தேவைப்படும்.

அப்போதுதான் தமிழர்களின் அறுவடை மாதமான தைத் திங்களில் விவசாயிகளின் தன்னலமற்ற உழைப்புக்கு ஏற்ற பலன் 'அமோக விளைச்சல்' என்று மக்களின் அத்தியாவசியத் தேவையான உணவுத் தேவை பூர்த்தி செய்யப்படும்.

எனவேதான், ஆண்டுதோறும் தமிழர்கள் தை முதல் நாளை பொங்கல் திருநாளாக, சீரும் சிறப்புமாகக் கொண்டாடுவார்கள். இதைக் கருத்தில் கொண்டே எப்போதும் ஜெயலலிதா அரசு, விவசாயிகளுக்குத் தேவைப்படும் விதை நெல், விவசாயிகளுக்குத் தேவைப்படும் உரங்கள் ஆகியவற்றைப் போதிய அளவு தயார் நிலையில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும்.

ஆனால், இந்த திமுக அரசோ, இந்தப் பருவத்துக்குத் தேவையான உரங்களை முன்னெச்சரிக்கையாக வாங்கி இருப்பு வைத்ததாகவோ, தேவைப்படும் மாவட்டங்களுக்கு வழங்கியதாகவோ, அதற்குண்டான முயற்சிகளில் இறங்கியதாகவோ தெரியவில்லை. தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்குத் தேவைப்படும் உரங்கள் தட்டுப்பாடாக உள்ளது என்று ஊடகங்களிலும், செய்தித்தாள்களிலும் கடந்த இரண்டு நாட்களாக, செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

எனவே, தமிழகத்தில் விவசாயிகளுக்குத் தேவைப்படும் உரங்கள் முழு அளவில் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், விவசாயிகள் உரத் தடுப்பாட்டால், குறிப்பிட்ட காலத்தில் பயிர்களுக்கு உரமிடாமல் கஷ்டத்தை அனுபவிக்கும் சூழ்நிலையைப் போக்கவும், இந்த அரசு விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் கிடைத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x