Published : 24 Mar 2016 05:49 PM
Last Updated : 24 Mar 2016 05:49 PM

மதுரையில் அழிக்கப்பட்ட நீர் ஆதாரங்களுக்கு அஞ்சலி: நாணல் நண்பர்கள் குழுவினர் விநோத நிகழ்ச்சி

மதுரையில் நாணல் நண்பர்கள் குழு சார்பில், அழிக்கப்பட்ட நீர் ஆதாரங்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒரு காலத்தில் ஏரிகள், குளங்கள் சூழப்பட்ட பசுமையான கிராமமாக மதுரை திகழ்ந்தது. கடந்த அரை நூற்றாண்டில் கட்டிடங்களுக்காக தனியாரும், அரசும் அழித்ததால் தற்போது அந்த ஏரிகள், குளங்கள் இருந்த இடம் தெரியாமல்போயின.

அதனால், மதுரையில் நிரந்தர வறட்சி ஏற்பட்டு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதில் அரசு நிர்வாகங்களின் அலட்சியம் தொடருவதால் அதிருப்தியடைந்த மதுரை நாணல் நண்பர்கள் குழுவினர் மதுரையில் அழிக்கப்பட்ட நீராதாரங்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நேற்று நடத்தினர். முதலில் ஆக்கிரமிப்புகள், கட்டிடக் கழிவுகள், கழிவுகள் கலக்கும் சாக்கடையாக மாற்றப்பட்ட வைகை ஆற்றுக்கு சென்று மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பிறகு ஆவின் பால்பண்ணையாக மாற்றப்பட்ட மதிச்சியம் கண்மாய், உலக தமிழ்ச் சங்கக் கட்டிடமாக, சட்டக் கல்லூரியாக, மாநகராட்சி அலுவலகமாக மாற்றப்பட்ட தல்லா குளம் கண்மாய்க்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

அங்கிருந்து மாவட்ட நீதிமன்றமாக மாற்றப்பட்ட செங்குளம் கண்மாய், வருமான வரி அலுவலகமாக மாற்றப்பட்ட பீ.பி.குளம் கண்மாய், மாவட்ட வருவாய் அலுவலர் குடியிருப்பாக மாற்றப்பட்ட புதூர் கண்மாய், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகமாக மாற்றப்பட்ட சம்பக்குளம் ஊருணி, கழிவுகளால் அழிக்கப்பட்ட சாத்தையாறு, கிருதுமால் நதி, மாட்டுத்தாவணி பஸ் நிலையம், பூ மார்க்கெட்டாக மாற்றப்பட்ட வண்டியூர் கண்மாய்க்கு சென்று இறுதியாக உயர் நீதிமன்றமாக மாற்றப்பட்ட உலகனேரி கண்மாய் என மதுரையில் அழிக்கப்பட்ட நீர் ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் தேடிச்சென்று அஞ்சலி செலுத்தினர்.

நீரை விற்பனை பொருளாக்க கூடாது

நாணல் நண்பர்கள் இயக்கத் தின் தமிழ்தாசன் கூறியதாவது:

அடுத்தகட்டமாக கிரானைட் குவாரிகளால் மேலூர் பகுதியில் அழிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளோம். நீர்நிலைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் வரை இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த உள்ளோம். நீதிமன்றங்களால் உத்தரவிடப்பட்டு, அதன் பேரில் அரசு நிர்வாகத்தால் பாதுகாக்கப்பட்ட, சீரமைக்கப்பட்ட ஏதேனும் ஒரு நீர்நிலையை கை நீட்டி காட்ட முடியுமா? மிகப்பெரிய மழைநீர் சேகரிப்பு தொட்டியான நீர்நிலைகளை அழித்துவிட்டு, மழைநீரை சேமியுங்கள் என்று மக்களை வலியுறுத்துகிற அரசின் போக்கு முரண்பாடானது. நமது உரிமையான நீரை விற்பனை பண்ட மாக்க விடக்கூடாது. மக்கள்தான் இதை தடுக்க வேண்டும் என்றார்



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x