

மாநிலக் கட்சிகளால் நாட்டை ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது என்றும், மூன்றாம் அணியில் 7 பேர் பிரதமராக நினைக்கிறார்கள் என்றும், பாஜக மூத்த தலைவர் வெங்கைய நாயுடு கூறியுள்ளார்.
சென்னையில் வசிக்கும் தமிழக மற்றும் ஆந்திர தொழிலதிபர்கள், பாஜக நண்பர்கள் என்ற பெயரில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பாஜக மூத்த தலைவர் வெங்கைய நாயுடு, பாஜக தமிழக மூத்த தலைவர் இல.கணேசன், நிர்வாகிகள் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வெங்கைய நாயுடு பேசியதாவது:
கடந்த முறை வாஜ்பாய் தலை மையிலான பாஜக ஆட்சியில், உள்கட்டமைப்பு வசதிகள், தொழிற் துறை என அனைத்து வகையிலும் இந்தியா முன்னேற்றத்தைக் கண்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா பின்னோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.
ஆனால், குஜராத்தில் முதல்வராக இருக்கும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். குஜராத் அனைத்து வகையிலும் முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. ஆனால் அதையெல்லாம் விட்டு விட்டு, 2002ல் நடந்தது என்ன என்று கேட்கிறார்கள்.
பின்னோக்கி ஏன் பார்க்கி றார்கள், முன்னோக்கிப் பாருங்கள். நடந்த சம்பவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் குஜராத் தில் எந்தவிதமான மதக்கலவரமும் கிடையாது. ஆனால் உத்தரப்பிரதேசம், டெல்லி என பல இடங்களில் காங்கிரஸ் ஆட்சியில் கலவரங்கள் நடந்துள்ளன.
மூன்றாம் அணி என்பது கானல் நீர் போன்றது. மூன்றாம் அணியில் வரும் என்று சொல்லக்கூடிய கட்சிகளையெல்லாம் ஒரே நேர்கோட்டில் சேர்க்க முடியுமா? திமுக, அதிமுகவை ஒரே நேரத்தில் மூன்றாம் அணியில் கொண்டு வர முடியுமா? மூன்றாம் அணியில் ஒவ்வொருவரும் பிரதமராக வேண்டுமென்று நினைக்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி 7 பேர் பிரதமர் கனவுடன் இருக்கிறார்கள். வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரதமர் இருக்க முடியுமா?
மாநிலக் கட்சிகள் நாட்டை ஆள வேண்டுமென்று நினைக்கின்றன. பிரதமராக நினைப்பவர்கள், உங்கள் மாநிலங்களுக்கு முதல்வராக இருக்கலாம். ஆனால் பிரதமர் என்பது ஒரு மாநிலத்துக்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களும் சேர்ந்த நாட்டுக்கு என்பதை மனதில் கொள்ள வேண்டும். எனவே, மாநிலக் கட்சிகள் எந்தக் காலத்திலும் நாட்டை ஆள முடியாது. மாநிலக் கட்சிகள் ஆண்டால், இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளையெல்லாம் எப்படி சுமுகமாக தீர்க்க முடியும். இவ்வாறு வெங்கைய நாயுடு பேசினார்.