மத்திய அரசின் திட்டங்களில் மோடி படத்தைப் பயன்படுத்துங்கள்: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக கோரிக்கை

மத்திய அரசின் திட்டங்களில் மோடி படத்தைப் பயன்படுத்துங்கள்: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக கோரிக்கை
Updated on
1 min read

மத்திய அரசு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும்போது அவற்றில் தாராளமாக பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தைப் பயன்படுத்துமாறு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மேலிட துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "பிரதமர் நரேந்திர மோடி 20 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு பொது வாழ்வில் முதல்வர், பிரதமர் என உயர்ப் பதவியில் இருக்கிறார். அதனை பாஜக கொண்டாடி வருகிறது.

இத்தருணத்தில் தமிழகத்தில் மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்தும்போது பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை மாநில அரசு பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அதில் ஏதும் அரசியல் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

ஏனெனில், பிரதமர் மோடி தமிழகத்துக்காக பிரத்யேகமாக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். தமிழ் மக்களின் ஏற்றத்திற்காக தாராளமாக நிதியை ஒதுக்கியுள்ளார்" என்று கூறினார்.

பிரதமரின் 20 ஆண்டுகால பொதுவாழ்வைக் கொண்டாடுவதன் ஒரு பகுதியாக் சென்னை ராயபுரம் பகுதியில் சுதாகர் ரெட்டி தலைமையில் இன்று (வியாழக்கிழமை) பாஜகவினர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். அப்போது தமிழக பாஜக மீனவர் பிரிவு தலைவர் சதீஷ் உடனிருந்தார். சுதாகர் ரெட்டி தலைமையில் பாஜகவினர் தெருக்களை சுத்தம் செய்து ப்ளீச்சிங் பவுடர் தூவினர். பின்னர், தெருவோரம் இருந்த ஆதரவற்றோருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்திக்கு அடுத்தபடியாக அதிக ஆண்டுகள் அரசியலில், பெரும்பதவியை வகித்தவர் என்ற அந்தஸ்தை பிரதமர் மோடி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in