இளையராஜா, விசாரணை படக் குழுவுக்கு ராமதாஸ் வாழ்த்து

இளையராஜா, விசாரணை படக் குழுவுக்கு ராமதாஸ் வாழ்த்து
Updated on
1 min read

தேசிய விருது பெற்றுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், சிறந்த மாநில மொழிப்படமாக விசாரணை திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த பின்னணி இசையமைப்பாளராக இளையராஜா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சிறந்த மாநில மொழிப்படமாக விசாரணை திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

இளையராஜா அவரது வாழ்வில் ஏராளமான பட்டங்களையும், விருதுகளையும் வென்றுள்ளார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை கடந்த 30 ஆண்டுகளில் 4 முறை வென்றுள்ளார்.

இப்போது ஐந்தாவது முறையாக தேசிய விருது அவருக்கு கிடைத்திருக்கிறது. அதுவும் குறிப்பாக அவர் இசையமைத்த 1000-ஆவது திரைப்படமான 'தாரை தப்பட்டை' படத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது.

அந்த படத்தில் மனதை வருடும் வகையில் இளையராஜாவின் பின்னணி இசை அமைந்திருக்கிறது. இது அவருக்கு மிகவும் பெருமை சேர்ப்பதாகும்.

சம காலத்திய இசையமைப்பாளர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர் இளையராஜா. மிகவும் எளிய பின்னணியிலிருந்து வந்து திரையுலகில் கண்டங்களை கடந்து சாதனைகளை படைத்து இசையுலகின் முடிசூடா மன்னராக திகழ்பவர்.

பலருக்கும் பல நேரங்களில் தனிமையை வெல்ல இளையராஜாவின் இசை தான் உதவியாக இருந்திருக்கிறது. இதற்கு நானும் விதிவிலக்கல்ல. அவ்வகையில் இளையராஜாவுக்கு தேசிய விருது கிடைத்தது எனக்கும் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியளிக்கிறது.

விசாரணை திரைப்படத்திற்கு மொத்தம் 3 விருதுகள் கிடைத்துள்ளன.

அந்த திரைப்படத்தின் இயக்குனர் வெற்றி மாறன் வித்தியாசமான பல முயற்சிகளை செய்பவர். அவரது தயாரிப்பில் உருவான காக்கா முட்டை, விசாரணை உள்ளிட்ட படங்கள் சமூகத்திற்கு சேதி சொல்பவை ஆகும். உலக அளவில் விருதுகளை வென்ற விசாரணை படம் தேசிய விருதுகளை வென்றதில் வியப்பேதும் இல்லை.

தேசிய விருது வென்ற தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பிற மாநில கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல புதுமைகளை படைத்து தமிழ் திரையுலகை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதுடன், அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய, சமூகத்திற்கு சேதி சொல்லும் படங்களை உருவாக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்"

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in