Published : 07 Oct 2021 03:12 AM
Last Updated : 07 Oct 2021 03:12 AM

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்; அமைதியாக நடந்த வாக்குப்பதிவு: 74.37% வாக்குகள் பதிவாகின; 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று நிறைவு

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடந்தது. சென்னையை அடுத்த பொழிச்சலூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களிக்க ஆர்வத்துடன் வரிசையில் காத்திருக்கும் பெண்கள். படம்: எம்.முத்துகணேஷ்

சென்னை

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள 39 ஒன்றியங்களில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியாக நடந்தது. இதில் 74.37 சதவீதம் வாக்குகள் பதிவானது.

தமிழகத்தில் விடுபட்டுப்போன காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கு அக். 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அத்துடன் இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவி களுக்கான இடைத்தேர்தல் 9-ம் தேதி நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

மொத்தம் 27,791 பதவிகளுக்கு 1 லட்சத்து 698 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். பரிசீலனையில் 1,246 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 15,287 பேர் மனுக்களை திரும்பப் பெற்றனர். 3,346 பதவிகளுக்கு வேட் பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டனர். இதையடுத்து, 24,416 பதவி களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. களத்தில் 80,819 வேட்பாளர்கள் உள்ளனர்.

9 மாவட்டங்களில் உள்ள 39 ஒன்றியங் களில் 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப் பினர்கள், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 1,577 ஊராட்சித் தலை வர்கள், 12,252 கிராம வார்டு உறுப்பினர் கள் பதவிக்கு நேற்று முதல்கட்ட தேர் தல் நடந்தது. இதற்காக 7,921 வாக் குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குச்சாவடி பணியில் 1 லட்சத்து 17 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத் தில் இருந்தபடி ஆணையர் வெ.பழனி குமார், செயலர் எ.சுந்தரவல்லி ஆகியோர் வாக்குப்பதிவு பணிகளை காணொலி காட்சி வாயிலாக பார்வையிட்டனர்.

முதல்கட்ட தேர்தலில் பதற்றமான தாக அறிவிக்கப்பட்ட 3,409 வாக்குச் சாவடிகளில் 1,168 நுண் பார்வை யாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 1,123 வாக்குச்சாவடிகளில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு, வெப் ஸ்ட்ரீ மிங் முறையில் தேர்தல் ஆணைய தலைமையகம், மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் ஆகியவற்றில் இருந்து வாக்குப்பதிவை நேரடியாக கண் காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 129 பறக்கும் படைகள் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்புப் பணியில் 39,408 காவ லர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேர்தல் ஆணையம் அறிவித்த 11 வகையான ஆவணங்களில் ஒன்றை காட்டி மக்கள் வாக்களித்தனர். மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கு சாய் தளம், சக்கர நாற்காலி போன்ற வசதி களும் செய்யப்பட்டிருந்தன. கரோனா தடுப்பு நடவடிக்கையாக வெப்ப மானி, கை சுத்திகரிப்பான், முகக் கவசம், கையுறை உள்ளிட்ட 13 வகையான பாதுகாப்பு பொருட்களும் வாக்குச் சாவடிகளில் வைக்கப்பட்டிருந்தன.

காலையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. காலை 9 மணி நிலவரப்படி 7.72 சதவீத வாக்குகளே பதிவாயின. பின்னர் வாக்குப்பதிவு சூடுபிடித்தது. ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசை யில் நின்று ஆர்வத்துடன் வாக்களித் தனர். பிற்பகல் 3 மணிக்கு வாக்குப் பதிவு 50 சதவீதத்தை கடந்தது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர் களுக்கு டோக்கன்கள் வழங்கப் பட்டு, வாக்களிக்க அனுமதிக்கப் பட்டது. ஒருசில இடங்களில் கட்சி யினரிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் நடந்தாலும், அசம்பாவிதங் கள் ஏதுமின்றி வாக்குப்பதிவு அமைதி யாக நடந்து முடிந்தது.

வாக்குப் பெட்டிகள் அனைத்தும் சீலிடப்பட்டு அந்தந்த பகுதி வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு கண் காணிக்கப்பட்டு வருகிறது.

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந் துள்ள நிலையில், மீதமுள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களில் வரும் 9-ம் தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 1,324 ஊராட்சித் தலைவர்கள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. 2-ம் கட்ட தேர்தலுக்கு 6,652 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக் கான இடைத்தேர்தலும் 9-ம் தேதி நடக் கிறது. 2-ம் கட்ட தேர்தல் நடக்கவுள்ள பகுதிகளில் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இருகட்ட தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள் வரும் 12-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் கூறும்போது, ‘‘நகர்ப் புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற் கான அனைத்து பூர்வாங்க பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்யும் பணிகளை வரும் 17-ம் தேதி பெல் நிறுவன பொறியாளர்கள் மேற்கொள்ள உள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x