

சாலை விபத்தில் சிக்கியவர்களை அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அவர்கள் உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகம். இதை மருத்துவத் துறையில் ‘கோல்டன் ஹவர்’ என்று சொல்கின்றனர்.
ஆனால் சாலை விபத்துகளில் சிக்கியவர்களை சரியான நேரத்தில் அழைத்துச் செல்ல முடியாததால் பலர் உயிரிழக்கின்றனர். மேலும் காயம் அடைந்தவர்களை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்வதால் வழக்கு, போலீஸ் விசாரணை என பல்வேறு தொல்லைகள் வரும் என பயப்படுகின்றனர்.
இந்நிலையில் சாலை விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நபர்களுக்கு ரொக்கப் பரிசு தருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சாலை விபத்தில் சிக்கியவர்களை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரைக் காப்பாற்ற உதவும் நல்ல உள்ளம் கொண்ட நபர்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
இதற்காக உள்ளூர் போலீஸ் நிலையத்தில் இருந்தோ அல்லது மருத்துவமனையில் இருந்தோ அவர்கள் ரசீதைப் பெற்று வரவேண்டும்.
மாவட்ட அளவிலான குழுக்கள் இதை பரிசீலனை செய்து மாதம்தோறும் இந்த பரிசுகள் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்துக்காக ஒவ்வொரு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தலா ரூ.5 லட்சத்தை மத்திய அரசு வழங்கும். இந்த நிதியிலிருந்து ரொக்கப் பரிசுகள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும்.
உள்துறை முதன்மை செயலர் தலைமையில் மாநில கண் காணிப்புக் குழு, இந்தத் திட்டத்தை கண்காணித்து அமல்படுத்தும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு நபர், ஓராண்டில் 5 முறை பரிசுகளை பெற முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.-பிடிஐ