

உள்ளாட்சித் தேர்தலையொட்டி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் பள்ளி மாணவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், தகுதியானவாக்காளர்களை மட்டும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்றுநடைபெற்றது. 2-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈச்சாங்குப்பம்ஊராட்சிக்கான துணை வாக்காளர் பட்டியலில் பல தகுதியானவாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, பள்ளி மாணவர்களின் பெயர்களை சேர்த்துள்ளதாக தமிழரசன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அதில், ஏற்கெனவே இதற்கு முன் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், நீக்கப்பட்ட வாக்காளர்களுக்கு இத்தேர்தலில் வாக்களிக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், சத்திகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஈச்சாங்குப்பம் கிராம ஊராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்கெனவே தொடங்கி விட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, "முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிவிட்டதால் இந்த மனு மீது எந்தஉத்தரவும் பிறப்பிக்க இயலாது. எனினும், ஆவணங்களை சரிபார்த்து, தகுதியானவர்களை மட்டும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.