

மத்திய, மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கைகளால் இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் வந்துள்ளது.
தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ்போல, 10 ஆண்டுகளுக்கு முன் பெரிய பாதிப்பை பன்றிக்காய்ச்சல் (ஏஎச்1என்1 இன்ஃப்ளுயன்சா வைரஸ் கிருமி) ஏற்படுத்தியது.
கரோனா தொற்று அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல், தும்மல் போன்றவைகளே பன்றிக்காய்ச்சலுக்கும் அறிகுறிகளாகும்.
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பன்றிக்காய்ச்சல் நோயாளிகளால் நிரம்பி வழிந்தன. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனால் மக்கள் மிகுந்த அச்சத்துக்குள்ளானார்கள்.
மத்திய, மாநில அரசுகள் எடுத்த தொடர் தடுப்பு நடவடிக்கைகளால் பன்றிக்காய்ச்சலின் பாதிப்பும், உயிரிழப்பும் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
2015-ல் பன்றிக்காய்ச்சலால் 42,592 பேர் பாதிக்கப்பட்டு, 2,990 பேர் உயிரிழந்தனர். ஆனால்,நடப்பாண்டில் பாதிப்பு எண்ணிக்கை 292-ஆகவும், உயிரிழப்பு 3- ஆகவும் குறைந்துள்ளது. தமிழகத்தில் 4 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, "சுகாதாரத் துறைக்கு பன்றிக்காய்ச்சல் மிகப்பெரிய சவாலாக இருந்தது.எனினும், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பன்றிக்காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது. முதலில் பன்றிக்காய்ச்சலை கொடிய நோய் என்று அறிவித்த உலக சுகாதார நிறுவனமே, பிறகு பருவக்காலங்களில் காணப்படும் சாதாரண ஃப்ளூ காய்ச்சல் என்றுஅறிவித்துவிட்டது. தற்போது, பன்றிக்காய்ச்சல் என்ற பெயரேமறந்துவிட்டது. சிலர் மட்டுமேபன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.
இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இல்லாத நிலை ஏற்படும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன” என்றனர்.