

வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடியின் பின்னால் தமிழகம் அணிவகுத்து நிற்கும் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் தமிழ் மொழி, திருக்குறள், மகாகவி பாரதியார், தமிழ் இலக்கியங்களின் சிறப்புகள் உள்ளிட்டவை குறித்து பேசிய கருத்துகள் 'வணக்கம் தமிழகம்-பிரதமரின் தமிழ் முழக்கம்' என்ற நூலாக தொகுக்கப்பட்டுள்ளன.
சென்னை மணப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை இந்த நூலை வெளியிட, மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், தமிழக பாஜக இணைப் பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசியப் பொதுச் செயலரும், தமிழகப் பொறுப்பாளருமான சி.டி.ரவி உள்ளிட்டோர் காணொலிக் காட்சி மூலம் விழாவில் உரையாற்றினார்.
விழாவில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: 2001 அக்டோபர் 7-ல் குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். 13 ஆண்டுகள் குஜராத் முதல்வர், 7 ஆண்டுகள் பிரதமர் என்று 20 ஆண்டுகளை நிறைவுசெய்து, நாளை (அக். 7) 21-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.
இந்த 20 ஆண்டுகால மோடியின் சாதனைகளைத் தொகுக்க வேண்டும் என்ற எங்களது முயற்சியே இந்நூல். தமிழகத்தில் பிரதமர் மோடி ஆற்றிய முதல் உரை முதல் கடைசியாக 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் அவர் தமிழகத்தைப் பற்றிக் குறிப்பிட்டது வரை இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.
குஜராத் முதல்வராக இருந்த 13 ஆண்டுகளில் தமிழகத்துக்கு மோடி வந்திருக்கிறார். தமிழகம், தமிழ் மொழி குறித்து நிறைய பேசியிருக்கிறார். இதுவரை 87 `மனதின் குரல்' நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார். அதில் 71 முறை தமிழகத்தைப் பற்றிய ஏதாவது ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டு பேசியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
தமிழகத்தில் சாதனை படைத்த எளிய மனிதர்களை பிரதமர் மோடி அடையாளப்படுத்திய பிறகே, மற்றவர்களுக்குத் தெரிய வந்துள்ளது.
மகாகவி பாரதியார் பற்றி 9 முறையும், திருக்குறள் பற்றி 33 முறையும் உலகெங்கும் பேசியிருக்கிறார்.
தமிழகத்துக்காக எண்ணற்ற திட்டங்களை பிரதமர் மோடி அரசு நிறைவேற்றியுள்ளது. இதற்காக தமிழகம் என்ன கைம்மாறு செய்யப் போகிறது என்று தெரியவில்லை. மோடி எதையும் எதிர்பார்ப்பவர் அல்ல. எனினும், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மோடியின் பின்னால் தமிழகம் அணிவகுக்கும். இந்த நூலை தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்வோம்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.