

முன்னாள் முதல்வர் பழனிசாமி, செப். 24-ல் சாத்தூர் வந்தபோது அதிமுகவினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆதரவாளர்களுக்கும், மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்களைத் தாக்கியதாக ராஜேந்திரபாலாஜி, ராசு, ஹரிஹரசுதன், பாண்டியராஜன், மாரிக்கனி ஆகியோர் மீது சாத்தூர் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி உட்பட 5 பேரின் முன் ஜாமீன் மனு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. இதையடுத்து உயர் நீதிமன்றக் கிளையில் ராஜேந்திரபாலாஜி உட்பட 5 பேரும் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்தனர்.
நீதிபதி புகழேந்தி முன்பு இந்த மனு வந்தபோது, அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அல்லது தலைமை நீதிபதியிடம் முறையிடலாம் என்றார். தலைமை நீதிபதி அமர்வு விடுமுறை என்பதால், இங்கு விசாரிக்க கோரிக்கை வைக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், முன்ஜாமீன் கோரிய மனுவின் விவரங்களைப் பார்த்த பின்பு வழக்கை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனக் கூறி, இவ்விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.