மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய குளக்கரைகளில் குவிந்த மக்கள்
கரோனா காரணமாக பொது இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மகாளய அமாவாசையை முன்னிட்டு குளக்கரைகளில் பொதுமக்கள் தர்ப்பணம் செய்ய குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மகாளய அமாவாசையின்போது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், கடந்தாண்டு முதல் கரோனா தாக்கம் காரணமாக, தர்ப்பணம் கொடுப்பதற்கு கரோனா விதிமுறைகளை காரணம் காட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மகாளய அமாவாசையை முன்னிட்டு வழக்கமாக மக்கள் அதிகளவில் தர்ப்பணம் செலுத்தும் கடற்கரைகள், குளக்கரைகள், கோயில் குளக்கரைகளில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் தடையை மீறி தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று தர்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் குளக்கரைகளில் அதிகளவில் கூடினர். சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தின் கரைப்பகுதியில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
அதே நேரம், பள்ளிக்கரணை பகுதியில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோயில் எதிரில் உள்ள குளக்கரையில் அதிகளவில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இது போல், சென்னையின் பல பகுதிகளிலும் தடை இருந்தபோதிலும், அதை பொதுமக்கள் பொருட்படுத்தவில்லை.
திருச்சி, ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையினர் தடை செய்த இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டதால் ஆறுகள், குளங்கள் உள்ள பகுதிகளில் அதிகளவில் பொதுமக்கள் கூடி புரோகிதர்கள் துணையுடன் தர்ப்பணம் செய்தனர்.
