Last Updated : 07 Oct, 2021 03:13 AM

 

Published : 07 Oct 2021 03:13 AM
Last Updated : 07 Oct 2021 03:13 AM

தமிழ்வழி படிப்புகளுக்கு கல்வி கட்டணத்தில் 25% சலுகை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் முடிவு

சென்னை

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் சென்னை சைதாப்பேட் டையில் செயல்பட்டு வருகிறது. இங்கு, அறிவியல், கணிதம் உள்ளிட்ட 21 படிப்புகள் உட்பட 130 இளநிலை, முதுநிலைப் பட்டம், பட்டயம் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் தொலைநிலை வழியில் கற்றுத் தரப்படுகின்றன. இவற்றில் மொத்தம் 28,957 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.இதற்கிடையே, தொலைநிலைக் கல்வியின் மேம்பாட்டுக்கு, உயர்கல்வித் துறை சார்பில் பல்வேறுநடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

அந்தவகையில், 10-க்கும் மேற்பட்ட புதிய படிப்புகளை தொடங்க திறந்தநிலைப் பல் கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

தொழில்சார் படிப்புகள்

இதுகுறித்து பல்கலை. பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது: தற்போதைய சூழலில், வேலைவாய்ப்புக்கு ஏற்ற தொழில்சார் படிப்புகளை அறிமுகம் செய்ய வேண்டியுள்ளது.

அதன்படி, இயங்குபடம் மற்றும் காட்சிப் படத்தோற்றம் (Animation& Graphics), சில்லறை விற்பனை மேலாண்மை (Retail Management), வடிவமைப்பு தொழில்நுட்பம் (Fashion Technology), ஊடகம் மற்றும் கேளிக்கை (Media & Entertainment) ஆகிய 4 இளநிலை தொழிற்சார் பட்டப் படிப்புகள் (பி.வோக்) தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக பல்கலைக்கழக மானியக் குழுவிடம் (யுஜிசி) ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதுதவிர, சமுக நீதி உட்பட பல்வேறு பிரிவுகளில் 15 சான்றிதழ்கள் மற்றும் குறுகிய படிப்புகள் தொடங்கப்பட உள்ளன. அதில், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை.யுடன் இணைந்து கரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு முறைகள் குறித்த பாடப் பிரிவும் ஒன்றாகும்.

இதற்கான அனைத்து முன்தயாரிப்புப் பணிகளும் முடிவடைந்துவிட்டன. நடப்பு கல்வியாண்டு முதலே இந்த படிப்புகளை நடைமுறைக்கு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம்.

ஏற்கெனவே பல்கலை.யில் குறைந்த கல்விக் கட்டணத்தில்தான் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. எனினும், பொருளாதாரத்தில் பின்
தங்கிய மாணவர்களின் நலன்கருதி, இந்த ஆண்டு முதல் கல்விக் கட்டணத்தில் சலுகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நடப்பு கல்வியாண்டு முதல் தமிழ்வழிப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு 25 சதவீதம் வரை கல்விக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும். இதர படிப்புகளில் சேரும் ஏழை, எளிய மாணவர்களுக்கு 5 முதல் 10 சதவீதம் வரை சலுகை வழங்குவது குறித்து பரிசீலனை செய்துவருகிறோம்.

வேலைவாய்ப்பு முகாம்கள்

மேலும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிசெய்ய, பிரத்யேக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்கள் மூலம் கடந்த ஆண்டு 2,473 பட்டதாரிகள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தமிழக அரசின் அனுமதி பெற்று, இந்த ஆண்டும்மண்டலம் வாரியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x