நாடு முழுவதும் 4-வது நாளாக நீடிக்கும் போராட்டம்: 2 லட்சம் நகை கடைகள் மூடல்

நாடு முழுவதும் 4-வது நாளாக நீடிக்கும் போராட்டம்: 2 லட்சம் நகை கடைகள் மூடல்
Updated on
1 min read

தங்க நகைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கலால் வரியை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் நகைக் கடை உரிமையாளர்கள் நேற்று 4-வது நாளாக கடையடைப்பு போராட்டம் நடத்தினர். சென்னை தி.நகரில் நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மத்திய பட்ஜெட்டில் முதல் முறையாக தங்க நகைகளுக்கு 1 சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ரூ.2 லட்சத்துக்கு மேல் நகை வாங்குவோருக்கு 1 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கலால் வரியை ரத்து செய்யக் கோரி நகைக்கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் நேற்று 4-வது நாளாக தொடர்ந்தது. நாடு முழுவதும் நடந்த கடையடைப்பு போராட்டத்தால் 2 லட்சம் கடைகள் மூடப்பட்டன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயங்கும் 35 ஆயிரம் நகைக் கடைகள் மூடப்பட்டன. இதற்கிடையே, தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சென்னை தி.நகரில் நேற்று போராட்டம் நடத்தினர். இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, “தங்க நகைகளுக்கு விதிக் கப்பட்டுள்ள 1 சதவீத கலால் வரியை நீக்கக் கோரி கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். இதனால், தினமும் தலா ரூ.350 கோடி வர்த்தகம் பாதிக்கப்படு கிறது. சனிக்கிழமை வாரத்தின் கடைசி நாள் என்பதால் வழக்கத்தைவிட 20 சதவீதம் வர்த்தகம் அதிகமாக இருக்கும். இதனால், நேற்று மட்டுமே ரூ.400 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களின் கோரிக்கைகள் குறித்து பிரதமர் மற்றும் மத்திய நிதி அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். அடுத்த சில நாட்களில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in