

வாணியம்பாடி அடுத்த மேட்டுப் பாளையம் பகுதியில் உள்ள பாலாற்று மேம்பாலத்தின் இரு புற பக்கவாட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்புச்சுவர் சரியான அடித்தளம் இல்லாமல் கட்டப்பட்டு வருவதால் அங்குள்ள இரும்பு கம்பிகள் அடியோடு பெயர்ந்து ஆற்றில் விழுந்தன. எனவே, தரமான தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரையும், உதயேந்திரம் பேரூராட்சியை இணைக்கும் மேம்பாலம் கடந்த 1974-ம் ஆண்டு தொடங்கி, 1977-ம்ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. சுமார் 300 மீட்டர் நீளமுள்ள இந்த மேம்பாலம் வழியாக ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு பொது மக்கள் சென்று வருகின்றனர்.
இந்த மேம்பாலத்தின் இரு பக்கவாட்டிலும் சுமார் ஒரு அடி உயரமுள்ள பிளாஸ்டிக் குழாய் களால் செய்யப்பட்ட சிறிய வகையிலான தடுப்பு இத்தனை ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், கால மாற்றத்துக்கு ஏற்ப மேம்பாலத்தின் இரண்டு புறங்களிலும் 5 அடி உயரமுள்ள தடுப்புச்சுவர் அமைக்கும் பணி களை நெடுஞ்சாலைத்துறை சமீபத்தில் தொடங்கியது.
மேம்பாலம் மீது எந்த ஒரு அடித்தளமும் இல்லாமல் சென்டரிங் கம்பிகள் கட்டப்பட்டு அதன் மீது தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. பாலத்தின் ஒரு பகுதியில் தடுப்புச்சுவர் முழுமையாக கட்டப்பட்டுள்ளது. கிழக்குப்பகுதியில் கம்பிகள் மட்டும் கட்டப்பட்ட நிலையில், அங்கு தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் தொடங்குவதற்கு முன் பாகவே சென்டரிங் கம்பிகள் அடியோடு பெயர்ந்து ஆற்றில் விழுந்தன.
எனவே, சரியான அடித்தளம் இல்லாமல் கட்டப்பட்டு வரும் தடுப்புச்சுவரும் எதிர்காலத்தில் பெயர்ந்து ஆற்றில் விழும் என்பதால் இதை முறையாக ஆய்வு செய்து பலமான தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வாணியம் பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கள் கூறும்போது, ‘‘வாணியம்பாடி-மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பாலாறு மேம்பாலம் பகுதி யில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் வரவேற்கதக்கதாக இருந்தாலும், அதை எதிர்கால நலன் கருதி தரமான முறையில் அமைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. மேம்பாலத்தின் இருபுறமும் எந்த விதமான பிடிப்பும் இல்லாமல் வெறும் இரும்பு கம்பிகளை நட்டு வைத்து அதன் மீது செங்கல் வைத்து தடுப்புச்சுவர் எழுப்பி வருகின்றனர்.
ஆகவே, தடுப்புச்சுவர் பணிகளை உடனடியாக நிறுத்தி, அங்கு தரமான தடுப்புச்சுவர் அமைப்பதற் கான வழிமுறைகளை மேற் கொள்ளவேண்டும்’’ என்றனர்.