Published : 06 Oct 2021 07:28 PM
Last Updated : 06 Oct 2021 07:28 PM

அஞ்சல் துறையில் இந்தி திணிப்பு முறியடிக்கப்பட்டது; அன்னைத்தமிழுக்கு கிட்டியது வெற்றி: சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி

தமிழகத்தில் இயங்கும் 14 ஆயிரம் அஞ்சலகங்களிலும் அடுத்த இரு வார காலத்துக்குள் பணவிடை மற்றும் சேமிப்புக் கணக்கு சார்ந்த படிவங்களில் தமிழ் இருக்கும். பிற 40 வகையான படிவங்களும் அச்சடிக்கப்பட்டு அடுத்த ஒரு மாத காலத்துக்குள் அஞ்சலகங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்பதை அஞ்சல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இது அன்னைத்தமிழுக்கு கிட்டிய வெற்றி என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அஞ்சல் அலுவலக பண விடைகள் (Money order) சிறு சேமிப்பு படிவங்கள் (Small savings forms) இந்தியிலும் , ஆங்கிலத்திலும் மட்டுமே இணைய வழியில் கிடைக்கின்றன; அலைபேசிகளில் கூட சாதாரண மக்கள் தமிழ் எழுத்துக்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிற காலத்தில் அஞ்சல்துறை மக்களுக்கு அந்நியமான மொழிகளை திணிப்பது நியாயமா? என்று மத்திய அமைச்சருக்கும், தலைமை அஞ்சல் பொது மேலாளருக்கும் 22.09.2021 அன்று கடிதம் எழுதியிருந்தேன்.

இந்திய ஆட்சிமொழி சட்டங்களின் படி மாநில மொழிக்கான உரிமைகளை பறிப்பதை அனுமதிக்க முடியாது, சட்டத்தை மீறி இந்தி திணிக்கப்படுவதை ஏற்கமாட்டோம் என்பதை அமைச்சகத்துக்கு உறுதிபட தெரிவித்தோம்.

இந்தப் பின்னணியில் இன்று சென்னையில் தலைமை அஞ்சல் பொது மேலாளரை சந்தித்தேன். அப்பொழுது அவர் அஞ்சல் துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து படிவங்களிலும் தமிழ் இருப்பதை எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளார்.

அதனடிப்படையில் தமிழகத்தில் இயங்கும் 14 ஆயிரம் அஞ்சலகங்களிலும் அடுத்த இரு வார காலத்துக்குள் பணவிடை மற்றும் சேமிப்புக் கணக்கு சார்ந்த படிவங்களில் தமிழ் இருக்கும். பிற 40 வகையான படிவங்களும் அச்சடிக்கப்பட்டு அடுத்த ஒரு மாத காலத்துக்குள் அஞ்சலகங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அஞ்சல் துறையில் தமிழ் மொழி இடம்பெறாத படிவமே இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். அன்னைத்தமிழுக்குக் கிடைத்த மற்றொரு வெற்றி.

இப்பிரச்சனையில் தலையீடு செய்த ஒன்றிய அமைச்சருக்கும், தலைமை அஞ்சல் அதிகாரிக்கும் எனது நன்றி.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x