

ஆண்டிப்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடத்தை உடனடியாகத் தொடங்கக் கோரிய வழக்கில் தேனி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி ஆண்டிபட்டியைச் சேர்ந்த ராஜன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''ஆண்டிப்பட்டியில் மாவட்ட முன்சீப் நீதிமன்றமும், குற்றவியல் நீதிமன்றமும் உள்ளது. தற்போது ஆண்டிப்பட்டி நீதிமன்றம் தனியார் மருத்துவமனை தரைத் தளத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது. இங்கு நூலகம், வழக்கறிஞர் அறை, கழிப்பறை வசதிகள் இல்லை. நீதிமன்றத்தை காலி செய்யுமாறு கட்டிட உரிமையாளர் பலமுறை தெரிவித்துவிட்டார்.
இதையடுத்து ஆண்டிப்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடம் கட்டுவதற்கு ஆண்டிப்பட்டியில் 2 ஏக்கர் நிலம் 2004-ல் ஒதுக்கத் தீர்மானிக்கப்பட்டது. 2017-ல் இடம் கையகப்படுத்தப்பட்டது. அந்த இடத்தில் தற்போது வரை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் அந்த இடத்தில் வேறு கட்டிடம் கட்டுவதற்கு ஆண்டிப்பட்டி பேரூராட்சி முடிவு செய்துள்ளது.
எனவே, ஆண்டிப்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வேறு கட்டிடம் கட்டக்கூடாது என்றும், ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடம் கட்டும் பணியை விரைவில் தொடங்கவும் உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக, தேனி மாவட்ட ஆட்சியர், ஆண்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ. 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.