

தேர்தல் பணிகளைக் காரணம் காட்டாமல் கட்டப்பஞ்சாயத்துக்கு எதிராக சட்டம் இயற்றும் பணிகளை தொடங்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
கடந்த 2005-ல் சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த கே.கோபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நல்லதண்ணீர் ஓடைக்குப்பம் மீனவர் சபா என்ற அமைப்பு, கட்டப் பஞ்சாயத்து நடத்தி என்னை ஊரை விட்டு ஒதுக்கிவைத்து ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தது.
எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, ரூ.40 ஆயிரத்தை திருப்பித்தர உத்தர விட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.
இதே போன்று, கடந்த 2006-ல் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த மகனுக்கு தண்ணீர் கொடுத்த குற்றத்துக்காக, தாய் ஒருவருக்கு கட்டப்பஞ்சாயத்து கும்பல் ரூ.500 அபராதம் விதித்தது என நாளிதழ் ஒன்றில் வந்த செய்தியின் அடிப்படையில் கட்டப்பஞ்சாயத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றமே, தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் சார்பில் நியமிக்கப்பட்ட சட்ட ஆணையர் அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்குகளின் விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசா ரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘இதுதொடர்பாக விசாரணை நடத்திய சட்ட ஆணையர் கட்டப்பஞ்சாயத்து அறவே ஒழிக்க வேண்டுமென் றால், அதற்கு எதிராக சட்டம் இயற்றினால் மட்டுமே முடியும் என தீர்க்கமாக தெரிவித்து உள்ளார்.
நடத்தை விதிகள் குறுக்கிடாது
இப்போது தேர்தல் நேரம் என்பதால் சட்டம் இயற்றுவது குறித்து நடவடிக்கை எடுக்க இன்னும் 4 மாத கால அவகாசம் தேவை என அரசு தரப்பில் கோரப்பட்டுள்ளது. கட்டப் பஞ்சாயத்துக்கு எதிராக சட்டமியற்ற, தேர்தல் நடத்தை விதிகள் ஒன்றும் குறுக்கே நிற்காது.
சட்டமியற்றுவதற்கான கீழ்மட்ட அடிப்படைப் பணிகளில் அரசு தீவிரம் காட்ட வேண்டும். புதிதாக அமையும் அரசு, கட்டப்பஞ்சாயத்துக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும். இது தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், விசாரணையை வரும் ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.