Published : 06 Oct 2021 06:19 PM
Last Updated : 06 Oct 2021 06:19 PM

தொடர் மழை பெய்ததால் காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியது: எட்டயபுரம் அருகே கிராம மக்கள் பாதிப்பு

எட்டயபுரம் அருகே ஆர்.வெங்கடேஸ்வரபுரத்துக்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து காட்டாற்று வெள்ளம் செல்கிறது.

கோவில்பட்டி

தொடர் மழை பெய்ததால் எட்டயபுரம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.

எட்டயபுரம் அருகே ஆர்.வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி உள்ளது. கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய எல்லையின் கடைசி ஊராக உள்ளது. தூத்துக்குடி - மதுரை நான்கு வழிச்சாலையில் இருந்து சுமார் 3.5 கி.மீ. தூரத்தில் உள்ள ஆர்.வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் சுமார் 210 வீடுகள் வரை உள்ளன. இங்குள்ள மக்கள் விவசாயம் மற்றும் கூலித்தொழில் செய்து வருகின்றனர்.

நான்குவழிச்சாலையில் இருந்து ஆர்.வெங்கடேஸ்வரபுரத்துக்கு வரும் வழியில் காட்டாற்று ஓடை குறுக்கே செல்கிறது. இதற்காக, அப்பகுதியில் தரைமட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும். அப்போது, ஊரை விட்டு வெளியேற முடியாமல், கிராமமக்கள் தவித்து வருகின்றனர். தரைமட்ட பாலத்தை அகற்றி விட்டு, மேம்பாலம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தற்போது விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று (அக். 05) பெய்த மழையில், காட்டாற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், நேற்று இரவு முதல் கிராமத்துக்கு உள்ளேயும், கிராமத்தை விட்டு வெளியேயும் செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர்.

இது குறித்து, ஊராட்சி மன்ற தலைவர் ஜி.ஞானசேகர் கூறுகையில், "நாங்கள் இந்தப் பிரச்சினையை 2 தலைமுறைகளாக சந்தித்து வருகிறோம். ஆனால், தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. இது குறித்து, அரசுக்கும் மனு அனுப்பி உள்ளோம்.

மழைக்காலங்களில் காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, எங்களால் கிராமத்தை விட்டு வெளியே செல்ல முடியாது. வேறு எந்தவொரு பாதையும் கிடையாது. பகல் நேரம் என்றால், காட்டுப்பாதையை பயன்படுத்திக்கொள்வோம். ஆனால், இரவு நேரங்களில் நாங்கள் படும் கஷ்டம் சொல்லிமாளாது. எனவே, தரைமட்ட பாலத்தை அகற்றி விட்டு, அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும். புதிதாக சாலையும் அமைத்துத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

பாதியில் நிற்கும் பாலப்பணிகள்:

விளாத்திகுளம் வட்டம் அருங்குளம் ஊராட்சியில் இருந்து அகிலாண்டபுரத்துக்கு செல்லும் சாலையோரம் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் இருந்து மாறுகால் பாயும் தண்ணீர் செல்லும் தாம்போதி பாலம் உள்ளது. மழைக்காலங்களில் கண்மாய் நிரம்பி மாறுகால் பாயும் போது, தண்ணீர் தாம்போதி பாலத்தை மூழ்கடித்துச் செல்லும்.

விளாத்திகுளம் அருகே அருங்குளத்தில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பாலப்பணிகள்.

இதில், சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு தாம்போதி பாலத்தில் ரூ.35 லட்சத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக 11 தூண்கள் அமைக்கப்பட்ட நிலையில், பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது பெய்த மழையில் கண்மாய்க்கு தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. இதில், கண்மாய் கரையோரம் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியே செல்கிறது. இதனால், அருங்குளம் கிராம மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 2.5 அடி உயரத்துக்கு ஓடும் தண்ணீரை கடந்து ஊருக்கு செல்கின்றனர்.

இது குறித்து, அருங்குளத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கூறும்போது, "அருங்குளத்தில் இருந்து அகிலாண்டபுரம் செல்லும் சாலையில் தான் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் செல்லும் இடத்தில் தாம்போதி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 3 ஆண்டுகளாக இங்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 11 கண்கள் அமைக்கப்பட்டுவிட்டன. மேலே பிளாட்ஃபார்ம் தான் அமைக்க வேண்டும். இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர், எம்.பி., அமைச்சருக்கு மனு அனுப்பி உள்ளேன்.

அருங்குளம் முதல் அகிலாண்டபுரம் வரையிலான சுமார் 2 கி.மீ. சாலையை புதுப்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், பாலமும் அமைத்து, சாலை புதுப்பித்தால் தான் மக்களுக்கு நன்மை பயக்கும். அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x