வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் கோவை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் சராசரி மழையளவு இருக்கும்: வேளாண் பல்கலை. கணிப்பு

வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட மழை விவரம் குறித்த வரைபடம் .
வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட மழை விவரம் குறித்த வரைபடம் .
Updated on
1 min read

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், கோவை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் சராசரி மழையளவும், சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சராசரியை விட அதிக அளவு மழையளவும் இருக்கும் என, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினர் கணித்துள்ளனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இன்று (அக். 06) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"நடப்பாண்டின் வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கான (அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென்மண்டலக் காற்றழுத்தக் குறியீடு ஆகியவற்றை உபயோகித்து, ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன் என்னும் கணினி கட்டமைப்பைக் கொண்டு நடப்பாண்டுக்கான வடகிழக்குப் பருவமழை முன்னறிவிப்பு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் அரியலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருச்சி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், வேலூர், விருதுநகர் ஆகிய 28 மாவட்டங்களில் சராசரியாக மழையளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் சராசரியை விட மழை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் கோவையில் 320 மி.மீ., திருப்பூரில் 310 மி.மீ., ஈரோட்டில் 280 மி.மீ., நீலகிரியில் 430 மி.மீ., சேலத்தில் 370 மி.மீ., நாமக்கல்லில் 300 மி.மீ., தருமபுரியில் 310 மி.மீ., கிருஷ்ணகிரியில் 270 மி.மீ., சென்னையில் 880 மி.மீ., திருச்சியில் 390 மி.மீ., மதுரையில் 420 மி.மீ., திருநெல்வேலியில் 520 மி.மீ., தஞ்சாவூரில் 600 மி.மீ. ஆகிய அளவுக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது".

இவ்வாறு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in