Last Updated : 06 Oct, 2021 05:15 PM

 

Published : 06 Oct 2021 05:15 PM
Last Updated : 06 Oct 2021 05:15 PM

மக்களிடம் விழிப்புணர்வு; புதுவையில் டெங்கு பரவுவதைத் தடுக்க முடியும்: ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் டெங்கு பரவுவதைத் தடுக்க முடியும் எனப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி எல்லைப்பிள்ளை சாவடியில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (அக். 6) நேரில் பார்வையிட்டு டெங்கு மேலாண்மை குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு சிகிச்சையில் இருந்த குழந்தைகள், தாய்மார்களிடம் நலம் விசாரித்தார். தொடர்ந்து அங்கிருந்த சில பெண்களிடம் கரோனா தடுப்பூசி போட்டுவிட்டீர்களா என்றும் கேட்டறிந்தார்.

பின்னர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘மழைக் காலங்களில் கொசுக்கடியால் டெங்கு காய்ச்சல் அதிக அளவு பரவ வாய்ப்பிருக்கிறது. புதுச்சேரியிலும் டெங்கு தொற்று சற்று அதிகமாக இருப்பதாகக் கேள்வியுற்று, இங்கு குழந்தைகள் வார்டில் அதற்காகச் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தேன்.

டெங்கு காய்ச்சலுக்கு நடைபெற்று வரும் சிகிச்சை, எதிர்காலத்தில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடினேன். கடந்த 10 ஆண்டுகளாக உயிரிழப்புகள் இல்லை என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளைப் பார்த்தேன். அவர்கள் நலமடைந்து வருகிறார்கள். டெங்கு சிகிச்சைக்குக் குழந்தைகளுக்காக 6 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் இன்னும் அதிகரிக்கப்படும்.

கொசு உற்பத்தியைத் தடுக்கப் பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் குப்பைகளை அப்புறப்படுத்தி வருகிறார்கள். அதனையும் கண்காணித்து வருகிறேன். டெங்கு சிகிச்சைக்குத் தேவையான ஏற்பாடுகளை மருத்துவமனை செய்துவருகிறது.

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தேவையான மருந்துகளை இருப்பு வைத்திருக்கிறது. இன்று காலை முதல்வரைச் சந்தித்தபோது டெங்கு காய்ச்சலுக்கான முன்னேற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருப்பது பற்றி விவாதித்தோம்.

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் டெங்கு பரவுவதைத் தடுக்க முடியும். பொதுமக்கள் அனைவரும் தயக்கம் இல்லாமல் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். புதுச்சேரியில் 100 சதவீதம் இலக்கை அடைய இன்னும் மூன்று லட்சம் தடுப்பூசி மட்டுமே போடவேண்டி இருக்கிறது.

புதுச்சேரியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறப்பதற்கான ஆலோசனைகளையும், அதற்கான முன்னேற்பாடுகளையும் பள்ளிக் கல்வித்துறை செய்து வருகிறது. அதன் பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.’’

இவ்வாறு துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x