

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வரும் 9-ம் தேதி பார்வையாளர்களுக்குத் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு 2 கட்டங்களாக இன்று அக்.6 ஆம் தேதி மற்றும் வரும் 9-ம் தேதிகளில் நடைபெறுகிறது.
தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் செங்கல்பட்டு மாவட்டமும் ஒன்றாகும். அம்மாவட்டத்தில் வரும் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, அம்மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அன்றைய தினம் பார்வையாளர்களுக்குத் திறக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் இன்று (அக். 06) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "செங்கல்பட்டு மாவட்டத்தில் 09.10.2021 (சனிக்கிழமை) அன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பொது விடுமுறை நாளாக அரசு அறிவித்ததன்படி, வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 09.10.2021 அன்று பார்வையாளர்களுக்குத் திறக்கப்படாது" எனத் தெரிவித்துள்ளார்.