

அரவக்குறிச்சியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னிறுத்தி ஆர்வக்கோளாறில் ஜோதிமணி பிரச்சாரம் செய்து வருவதாகவும் இனி அதுபோன்ற நிகழ்ச்சி தொடராது என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதா வது: தேர்தலின்போது செலவு செய்வதற்காக அதிமுகவினர் மாவட்டம் தோறும் குறிப்பிட்ட ஒரு இடத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை பதுக்கி வைத்துள்ளனர். தேர்தல் ஆணையம் அவற்றை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரவக்குறிச்சி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஜோதிமணி பிரச்சாரம் செய்வது தவறு. ஆர்வக்கோளாறு காரண மாக நடக்கும் இது போன்ற நிகழ்ச்சி கள் இனிமேல் தொடராது. சட்டப் பேரவை தேர்தலில் இம்முறை காங்கிரஸில் கோஷ்டிகளுக்கு டிக்கெட் கிடையாது; கோட்டா சிஸ்டமும் கிடையாது. விருப்பமனு தந்தவர்களுக்கு மட்டுமே வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு தரப் படும்.
திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவதை பொறுத்தவரை கருணாநிதியின் கருத்துதான் எங்கள் கருத்து. சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதா தோற்க வேண்டும் என்ற ஆவலில் நாங்கள் இருப்பதால், தொகுதி எண்ணிக்கை, தொகுதிகள் ஒதுக்கீடு போன்றவற்றில் எங்களுக்கும் திமுகவுக்கும் எந்த பிரச்சினையும் வராது. மக்கள் நலக் கூட்டணியில் இருந்து சிலகட்சிகள் வெளியே வர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.