திருச்சியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணை வளாகம்: துணைவேந்தர் தகவல் 

திருச்சியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணை வளாகம்: துணைவேந்தர் தகவல் 
Updated on
2 min read

திருச்சியில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணை வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்தார்.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் திருவாரூர் அருகே நீலக்குடியில் செயல்படுகிறது. இதன் 6-வது பட்டமளிப்பு விழா காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் பத்மநாபன் தலைமை வகித்தார். காணொலி வாயிலாக மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய பாதுகாப்புத் துறை ஆலோசகர் சதீஷ் ரெட்டி ஆகியோர் சிறப்புரையாற்றி, பட்டம் பெற்ற மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

அதில் திருவாரூர் அருகே நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன், செய்தித் தொடர்பாளர் வேல்முருகன் மற்றும் பேராசிரியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சி இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த விழா முடிவடைந்த பின்னர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

’’கரோனா காரணமாக, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி வகுப்புகள் வரும் 20-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளன. ஒரே நேரத்தில் அனைத்து மாணவர்களையும் அனுமதிக்க முடியாது என்பதால், இளங்கலை மூன்றாம் ஆண்டு மற்றும் முதுகலை இறுதியாண்டு பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மட்டும் முன்னதாக வகுப்புகள் தொடங்கவுள்ளன.

வகுப்புகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் இரண்டு தவணை தடுப்பூசியையும் கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும். வகுப்புக்கு வரும்போது அதற்கான சான்றிதழ்களைச் சமர்ப்பித்தால் மட்டுமே, மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இன்றைய பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து 754 மாணவிகள், 810 மாணவர்கள் உட்பட 1,596 மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பதிவுத் தபாலில் பட்டம் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைக் கடந்த வாரம் சந்தித்துப் பேசினோம். அப்போது மத்தியப் பல்கலைக்கழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். திருச்சியில் 25 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணை வளாகம் அமைக்கவும் இடம் ஒதுக்குவதாகத் தெரிவித்துள்ளார். அதிக அளவு தமிழக மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே இத்தகைய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மத்தியப் பல்கலைக்கழகத்துக்குத் தேவையான நிதியை மத்திய அரசு தொடர்ந்து கொடுத்து வருகிறது. தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் விரைவில் விளையாட்டுக்கெனத் தனித்துறை கொண்டுவரப்பட உள்ளது இதற்காக சிறப்பு நிதி ஒதுக்கீட்டையும் கோரியுள்ளோம்’’.

இவ்வாறு துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in