திருநள்ளாற்றில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய புதுச்சேரி உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம்.
திருநள்ளாற்றில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய புதுச்சேரி உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம்.

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்: அமைச்சர் நமச்சிவாயம்

Published on

நடைபெறவுள்ள புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என பாஜகவைச் சேர்ந்த புதுச்சேரி உள்ளாட்சித்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் கூறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, காரைக்கால் மாவட்டத்தில் கோட்டுச்சேரி, திருநள்ளாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் இன்று (அக்.6) ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

இதில் பங்கேற்ற அமைச்சர் நமச்சிவாயம் திருநள்ளாற்றில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"புதுச்சேரியில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பாஜக சார்பில் தொடர்ந்து அந்தந்தப் பகுதிகளில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி எவ்வாறு சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்ததோ அதேபோன்று ஒருங்கிணைந்து உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. முதல்வர் என்.ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றி வருகிறது. கரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

முதியோர் உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் பேருக்கு புதிதாக முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவும், காலிப் பணியிடங்களை நிரப்பவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதுச்சேரிக்குத் தடையின்றி கரோனா தடுப்பூசிகளை பிரதமர் வழங்கி வருகிறார். 80 சதவீதம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்களது கோரிக்கையை ஏற்று புதுச்சேரியில் சட்டப்பேரவைக் கட்டிடம் கட்ட ரூ.300 கோடிக்கு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். ஜிஎஸ்டி நிலுவைத்தொகை ரூ.330 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ரூ.20 கோடி நிதி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகள் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ளன. மாநில வளர்ச்சிக்காக பாஜக தொடர்ந்து பாடுபடும்".

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

பாஜக மாநிலத் தலைவர் வி.சாமிநாதன், துணைத் தலைவர்கள் வி.கே.கணபதி, எம்.அருள்முருகன், நளினி, மாவட்டத் தலைவர் ஜெ.துரை சேனாதிபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in