

ஜமீன் தேவர்குளம் ஊராட்சித் தலைவர் தேர்தல் முடிவை நிறுத்திவைக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
''உள்ளாட்சி அமைப்புகளில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக தனது உயிரை மாய்த்துக்கொண்ட ஜமீன் தேவர்குளம் ஊராட்சியைச் சார்ந்த வெற்றிமாறனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஊராட்சி மன்றத் தலைவருக்கான தேர்தலில் தான் போட்டியிடுவதைச் சிலர் திட்டமிட்டே தடுத்துவிட்டனர் என்று அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளாமல், அதுகுறித்து உண்மைநிலை அறிய தமிழக அரசு 'சிறப்புப் புலனாய்வு விசாரணை'க்கு ஆணையிட வேண்டுமென விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். அத்துடன், அவ்விசாரணையின் முடிவு வரும்வரை அவ்வூராட்சிக்கான தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
சமூகத்தின் அனைத்துத் தரப்புக்கும் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டதுதான் பஞ்சாயத்து ராஜ் சட்டம். அதன் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளில் பொதுத் தொகுதிகள், சுழற்சி முறையில் தனித் தொகுதிகளாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
அத்தகைய தொகுதிகளில் இருக்கும் எண்ணிக்கை பலமுள்ள தலித் அல்லாத சமூகத்தினர், தங்களின் வேலையாட்களையோ அல்லது கையாட்களையோ வேட்பாளராக நிறுத்தி, பிற தலித்துகளைப் போட்டியிடவிடாமல் தடுத்து அல்லது போட்டியிட்டாலும் வெற்றி பெறவிடாமல் தடுத்து, தாங்களே பெருந்தொகையைச் செலவழித்துத் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ளவர்களை வெற்றி பெறச் செய்து மறைமுகமாகத் தாங்களே அந்த இடங்களைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். இது பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சீர்குலைப்பதோடு, பட்டியல் சமூகத்தினருக்கு அரசியலமைப்புச் சட்டப்படி வழங்கப்பட்டிருக்கும் சமூக நீதி உரிமையை மறைமுகமாக மறுப்பதாகவும் இருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்போதெல்லாம் தமிழ்நாட்டில் பரவலாக இத்தகைய புகார்கள் எழுகின்றன. எனவே, இதற்கெனத் தனியே ஒரு விசாரணைக் குழுவை அமைத்து எங்கெல்லாம் இப்படியான புகார்கள் எழுந்துள்ளனவோ, அவற்றை ஆராய்ந்து உண்மையான அதிகாரப் பரவலுக்குத் தமிழக அரசு வழிவகுக்க வேண்டும்.
ஏற்கெனவே, உள்ளாட்சித் தேர்தலையே நடத்தவிடாமல் தடுக்கப்பட்டிருந்த பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில், தான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் வெற்றிகரமாக அத்தேர்தலை நடத்தி அங்கெல்லாம் ஜனநாயகத்தை நிலைநாட்டச் செய்தவர் இன்றைய தமிழக முதல்வர் என்பதை நாடறியும்.
அத்தகைய முதல்வர், உள்ளாட்சி அமைப்புகளில் எளிய மக்களுக்கான அதிகாரத்தைத் தட்டிப்பறித்துக் கொள்ளும் முறைகேடான நடைமுறையை முற்றாகக் களைந்து பட்டியல் சமூகத்தினர் அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்''.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.