Last Updated : 06 Oct, 2021 02:37 PM

 

Published : 06 Oct 2021 02:37 PM
Last Updated : 06 Oct 2021 02:37 PM

அயோத்தி ராமர் கோயில் பிரம்மாண்ட கட்டுமானப் பணி 2023 டிசம்பரில் நிறைவடையும்: விஎச்பி மிலிந்த் பரந்தே

புதுச்சேரி

அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்ட கட்டுமானப் பணி வரும் 2023 டிசம்பரில் நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம். இந்த மாபெரும் விழாவில் நாட்டு மக்களைப் பங்கேற்க வைக்கப் பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளோம் என்று விசுவ இந்து பரிஷத் (விஎச்பி) அகில உலகப் பொதுச் செயலாளர் மிலிந்த் பரந்தே தெரிவித்துள்ளார்.

விசுவ இந்து பரிஷத்தின் அகில உலகப் பொதுச் செயலாளர் மிலிந்த் பரந்தே புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க 11 மாநிலங்களில் தடைச் சட்டம் உள்ளது. இந்தத் தடைச் சட்டத்தை நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டுவர வேண்டும். இதற்காக அனைத்து மாநில அரசுகளையும் சந்தித்து வலியுறுத்தி வருகிறோம். புதுச்சேரியிலும் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகிறோம். மாநில அரசுகள் கோயில்கள் மீது உரிமை கொண்டாடக் கூடாது. இந்து ஆலயங்களையும், திருமடங்களையும் இந்து சமுதாயத்திடம் அரசுகள் ஒப்படைக்க வேண்டும்.

இதர மதத்தினரைப் போல் இந்துக் கோயில்களை இந்து மதத்தினரிடம் தரவேண்டும். இந்து மதக் கோயில்களில் தரப்படும் காணிக்கைகள் சரிவரக் கையாளப்படுவதில்லை. கோயில் காணிக்கைகளை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது. பக்தர்கள் தரும் காணிக்கைகளை இந்து மதம் சாராத பணிகளில் பயன்படுத்தக் கூடாது.

அயோத்தியில் ராமர் கோயிலில் பிரம்மாண்ட கட்டுமானப் பணி நடந்து வருகிறது. கட்டுமான அடித்தளப் பணிகள் அக்டோபருக்குள் நிறைவடையும். 2023-ம் ஆண்டு டிசம்பரில் இந்தப் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். அந்த டிசம்பரில் ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறும். இந்த மாபெரும் விழாவில் நாட்டு மக்களைப் பங்கேற்க வைக்கும் விதமாகப் பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.

கரோனா பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாடு முழுவதும் தேவையானோருக்கு உணவு, குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துள்ளோம். அத்துடன் மருத்துவ வசதிகள், இறுதிச்சடங்கு உட்படப் பல்வேறு சேவைகளைச் செய்துள்ளோம். கிராமப்புறங்களில் மக்களிடையே கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். மக்களின் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான மருத்துவ உதவிகளைச் செய்து வருகிறோம்" என்று குறிப்பிட்டார்.

பேட்டியின்போது விஎச்பி விஸ்வ ஹிந்து பரிஷத்தின் வட தமிழகச் செயலாளர் ஞானகுரு, அமைப்புச் செயலாளர் ராமன், இணைச் செயலாளர் ராஜா, சமுதாய நல்லிணக்க அமைப்பாளர் வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x