Published : 06 Oct 2021 02:15 PM
Last Updated : 06 Oct 2021 02:15 PM

அதிமுக 50-ம் ஆண்டு விழா: நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் வேண்டுகோள்

சென்னை

அதிமுக தொடங்கப்பட்டு 50-ம் ஆண்டு பொன்‌ விழா அக்.17-ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ.பன்னீர்‌ செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்‌ எடப்பாடி பழனிசாமி ஆகியோரின்‌ கூட்டறிக்கை:

''தமிழகத்தில்‌ நடைபெற்று வந்த தீய சக்தியின்‌ ஆட்சியை அகற்றி, தர்மத்தையும்‌, நீதியையும்‌ நிலைநாட்ட வேண்டும்‌ என்ற நல்ல எண்ணத்தில்‌, உழைப்பால்‌ உயர்ந்தவரும்‌, பேரறிஞர்‌ அண்ணாவின்‌ இதயக்‌ கனியும்‌, தலைமுறைகள்‌ பல கடந்தும்‌ மக்கள்‌ நாயகனாகத் தொடர்ந்து விளங்குபவரும்‌, மக்கள்‌ போற்றும்‌ மாமனிதராக இப்புவியில்‌ வாழ்ந்து மறைந்தும்‌, மறையாதவராக கோடிக்கணக்கான மக்களின்‌ இதயங்களில்‌ குடிகொண்டிருக்கும்‌ 'மக்கள்‌ திலகம்‌' எம்‌ஜிஆரால்‌ தமிழக மக்களுக்காக உருவாக்கப்பட்ட மாபெரும்‌ மக்கள்‌ பேரியக்கமாம்‌ “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌” 49 ஆண்டுகளைக்‌ கடந்து, 17.10.2021 - ஞாயிற்றுக்‌ கிழமை அன்று “பொன்‌ விழா” காண இருக்கும்‌ திருநாளை, அதிமுகவின்‌ ஒவ்வொரு தொண்டரும்‌ மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய நேரமிது.

வரலாற்றுச்‌ சிறப்புமிக்க கழகத்தின்‌ “பொன்‌ விழா” ஆண்டைக்‌ கொண்டாடும்‌ விதமாக, அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும்‌ மாவட்டக்‌ கழகங்களின்‌ சார்பில்‌ ஆங்காங்கே அமைந்திருக்கும்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது திருவுருவச்‌ சிலைகளுக்கும்‌, அவர்களது படங்களுக்கும்‌ மாலை அணிவித்து சிறப்பிக்குமாறு கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

அதே போல்‌, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, கிளை, வார்டு, வட்ட அளவிலான அனைத்து இடங்களிலும்‌, எங்கு நோக்கினும்‌ அதிமுக கொடிகள்‌ கம்பீரமாக பட்டொளி வீசிப்‌ பறக்கும்‌ வகையில்‌, அதிமுக கொடிக்‌ கம்பங்கள்‌ இல்லாத இடங்களில்‌ உடனடியாக கொடிக்‌ கம்பங்களை அமைத்தும்‌; ஏற்கெனவே அமைக்கப்பட்டிருக்கும்‌ அதிமுக கொடிக்‌ கம்பங்களுக்கு புது வண்ணங்கள்‌ பூசியும்‌, நம்‌ வெற்றியைத்‌ தாங்கி நிற்கும்‌ அதிமுக கொடியினை ஏற்றி வைத்து விழாக்‌ கோலம்‌ பூண்டு, இனிப்புகள்‌ வழங்கி சிறப்பிக்க வேண்டுமாய்‌ அன்போடு கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

மேலும்‌, அதிமுக செயல்பட்டுக்‌ கொண்டிருக்கும்‌ புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும்‌ அந்தமான்‌ உள்ளிட்ட பிற மாநிலங்களிலும்‌, அதிமுகவின்‌ தொடக்க நாளை சிறப்பாகக்‌ கொண்டாடுமாறு கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

அதிமுகன்‌ பொன்‌ விழா தொடக்க நாள்‌ நிகழ்ச்சிகளில்‌, ஆங்காங்கே பங்கேற்கும்‌ அதிமுக நிர்வாகிகள்‌ மற்றும்‌ தொண்டர்கள்‌ அனைவரும்‌, கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும்‌ வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றியும்‌, சமூக இடைவெளியைக்‌ கடைப்பிடித்தும்‌, முகக்‌ கவசம்‌ அணிந்தும்‌, இன்ன பிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும்‌ பங்குபெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்''‌.

இவ்வாறு ஓபிஎஸ், ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x