

டி.23 புலியைப் பிடிக்கும் பணியில் 12-வது நாளாக இன்று நான்கு இடங்களில் பரண்கள் அமைத்து புலியின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நான்கு பரண்களில் வனக் கால்நடை மருத்துவர்கள் 4 பேரைக் கொண்டு மயக்க ஊசி செலுத்தி, புலியைப் பிடிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும், தமிழ்நாடு முதன்மை உயிரின வனப் பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் தெரிவித்தார்.
இது தொடர்பாக, இன்று (அக். 06) செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கூடலூர் தேவன் எஸ்டேட், மேபீல்டு, சிங்காரா பகுதியில் 4 நபர்களையும், 40-க்கும் மேற்பட்ட கால்நடைகளைக் கொன்ற டி.23 புலியைப் பிடிக்கும் பணி தொடர்ந்து 12-வது நாளாக நடைபெற்று வருகிறது.
டி.23 புலியைப் பிடிக்கும் பணியில் ஈடுபடும் வன ஊழியர்கள், புலியின் பாதுகாப்பு உறுதி செய்த பிறகு புலியைப் பிடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் புலி, முதிர்ச்சியின் காரணமாகக் கால்நடைகள் மற்றும் மனிதர்களைத் தாக்கி வருகிறது.
வேட்டைத் தடுப்புக் காவலர்களான பழங்குடியினர்கள் ஆலோசனையின்படி புலியைப் பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டி.23 புலி பிடிபட்டவுடன் கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு 12,500-லிருந்து 15,000 சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் நீலகிரி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் மனித - வனவிலங்கு மோதல்கள் அதிகரித்து வருவதால், அதனைத் தடுக்கும் வகையில், மக்களை அச்சுறுத்தி இடையூறு செய்யும் வனவிலங்குகளைக் கண்டறிந்து ரேடியோ காலரிங் மூலம் மற்றும் வன ஊழியர்கள் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மேலும், வயது முதிர்வு காரணமாக வேட்டையாடும் திறனை இழந்ததால் மனிதர்கள் மற்றும் கால்நடைகளைத் தாக்குவதாகவும், புது உத்திகளைக் கையாண்டு டி.23 புலி பிடிக்கப்படும் என்றும் தமிழ்நாடு முதன்மை உயிரின வனப் பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் உறுதியளித்தார்.