Published : 06 Oct 2021 11:56 AM
Last Updated : 06 Oct 2021 11:56 AM

அம்முண்டி கிராம ஊராட்சி பட்டியலினப் பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கீடு: தேர்தல் புறக்கணிப்பு

அம்முண்டி ஊராட்சியில் வாக்காளர்கள் யாரும் வாக்களிக்க வராததால் வாக்குச்சாவடி வெறிச்சோடிக் காணப்பட்டது.

வேலூர்

அம்முண்டி கிராம ஊராட்சியைப் பட்டியலினப் பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்ததைக் கண்டித்து, ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டில் உள்ள 9 கவுன்சிலர் பதவிக்கு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால், ஊர் மக்கள் கட்டுப்பாடு காரணமாக, ஒரு வாக்கு கூடப் பதிவாகவில்லை.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (அக். 06) காலை 7 மணிக்குத் தொடங்கியது. தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 247 கிராம ஊராட்சித் தலைவர், 2,079 ஊராட்சி வார்டு கவுன்சிலர், 138 ஊராட்சி ஒன்றியக் குழு கவுன்சிலர், 14 மாவட்ட ஊராட்சிக் குழு கவுன்சிலர் என, மொத்தமுள்ள 2,478 பதவிகளுக்கு இரண்டு கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில், முதல்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியங்களில் இன்று காலை தொடங்கியுள்ளது. தேர்தலில் 4 லட்சத்து 61 ஆயிரத்து 103 பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தலுக்காக 862 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 719 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா வசதிகளை ஏற்படுத்தியுள்ளனர்.

காலியான அம்முண்டி ஊராட்சி:

இதனிடையே, அம்முண்டி கிராம ஊராட்சியைப் பட்டியலினப் பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்ததைக் கண்டித்து, ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டில் உள்ள 9 கவுன்சிலர் பதவிக்கு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இந்த ஊராட்சியில் 1,033 பெண்கள், 1,012 ஆண்கள் என, மொத்தம் 2,045 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

இவர்களுக்காக ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 213, 214, 215, 216, 217 என, மொத்தம் 5 வாக்குச்சாவடிகள் அமைத்துள்ளனர். ஆனால், ஊர் மக்கள் கட்டுப்பாடு காரணமாக, ஒரு வாக்கு கூடப் பதிவாகவில்லை. கிராம ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிலர் வாக்களிக்க வந்தனர். அவர்களை கிராம மக்கள் வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால், அவர்களும் திரும்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

மேற்கண்ட 5 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் எந்தவிதப் பணியும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x